களைகட்டும் பொங்கல் திருநாள் – பொதுமக்கள் உற்சாக கொண்டாட்டம்

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை இன்று உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அதிகாலையிலேயே புதுப்பானையில் பொங்கல் வைத்து குடும்பத்துடன் வழிபட்டு வருகின்றனர்.

நாம் பல்வேறு விழாக்கள், பண்டிகைகளை கொண்டாடினாலும், தமிழர்களின் மிக முக்கியமான பண்டிகையாக விளங்குவது தைப் பொங்கல் பண்டிகை தான். நாட்டின் முதுகெலும்பாக திகழும் விவசாயிகள் உழவர் திருவிழாவாக இதனை கொண்டாடுகின்றனர். விவசாயத்துக்கு ஆதாரமாக திகழும் கதிரவன், விவசாயத்துக்கு உதவும் கால்நடைகள், உழவுப் பொருட்களை இந்த நாளில் தெய்வமாக கருதி வணங்கி வழிபாடு நடத்துகின்றனர் விவசாயிகள்.

நகரங்களிலும் கூட பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற கூற்றுக்கு ஏற்ப தை மாத பிறப்பை மக்கள் மிகவும் புனிதமாகவும், நேர்மறை சிந்தனைகளுடனும் மக்கள் வரவேற்கின்றனர். அறுவடை பருவத்தின் தொடக்கமான தை மாதத்தில் உழவர்கள் தங்கள் அறுவடையை தொடங்குவார்கள். அந்த அறுவடையில் கிடைத்த நெல் சேர்த்து மஞ்சள் கொத்து கட்டிய புதுப்பானையில் புத்தரிசி, சர்க்கரை, வெல்லம், பால், நெய் போன்றவற்றை கொதிக்க வைத்து பொங்கல் வைத்து சூரியனுக்கு படையலிட்டு மகிழும் ஒரு உற்சாகமான விழா தான் தைப் பொங்கல்.

பண்பாட்டுத் திருவிழாவான பொங்கலை புதுமணத் தம்பதிகள் தலைப் பொங்கலாக கருதி ஜோடியாக இணைந்து பொங்கல் வைத்து வழிபட்டு வருகின்றனர்.

பொங்கலை பண்டிகையை ஒட்டி முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், ஆளுநர் ஆகியோர் தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பொங்கல் பண்டிகையை ஒட்டி தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு விழாக்கள் தொடங்கியுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.