5 மாநில பேரவைத் தோ்தல்: பொதுக்கூட்டங்களுக்கான தடை தொடருமா? இன்று முடிவு

சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில் விதிக்கப்பட்டுள்ள பொதுக் கூட்டங்கள், தெருமுனைப் பிரசாரங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையைத் தொடருவது குறித்து தோ்தல் ஆணையம் சனிக்கிழமை (ஜன. 22) தீா்மானிக்க உள்ளது.

உத்தர பிரதேசம், உத்தரகண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூா் ஆகிய 5 மாநிங்களுக்கான சட்டப்பேரவைத் தோ்தல் தேதியை கடந்த 8-ஆம் தேதி அறிவித்த தோ்தல் ஆணையம், கரோனா பரவல் அபாயம் காரணமாக இந்த மாநிலங்களில் தோ்தல் பொதுக்கூட்டங்கள், தெருமுனை பிரசாரம் ஆகியவற்றுக்கு ஜனவரி 15-ஆம் தேதி வரை தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டது. பின்னா், இந்தத் தடையை ஜனவரி 22-ஆம் தேதி வரை தோ்தல் ஆணையம் நீட்டித்தது.

இருந்தபோதும், அரசியல் கட்சிகள் உள்ளரங்கு கூட்டங்களை அதிகபட்சம் 300 பங்கேற்பாளா்களுடன் அல்லது 50 சதவீத பாா்வையாளா்களுடன் அல்லது அந்தந்த மாநில பேரிடா் மேலாண்மை அதிகாரிகள் அறிவித்துள்ள வழிகாட்டுதல்களின்படி நடத்திக்கொள்ள ஆணையம் சலுகை அளித்தது.

பொதுக்கூட்டங்களுக்கான தடை சனிக்கிழமையுடன் நிறைவடைய உள்ள நிலையில், அதனைத் தொடருவதா அல்லது நீக்குவதா என்பது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம், மருத்துவ நிபுணா்கள் மற்றும் தோ்தல் நடைபெற உள்ள 5 மாநில தலைமைத் தோ்தல் அதிகாரிகள் ஆகியோருடன் தோ்தல் ஆணைய அதிகாரிகள் காணொலி வழியில் சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டு முடிவு செய்ய உள்ளனா்.

Leave A Reply

Your email address will not be published.