என்னைச் சிறைக்குள் தள்ள ஆதாரம் இல்லை.

இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தன்னை சிறைப்படுத்த முடியாது எனவும், தன்னைச் சிறைப்பிடிப்பதற்கான காரணங்களோ அல்லது சாட்சிகளோ இல்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

தன்னைச் சிறைப்படுத்தப் போவதாக வெளியாகும் தகவல்கள் பொய்யானைவை எனவும் தவறான தகவல்கள் பரவுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்று (22) நடைபெற்றது. அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டில் பிரச்சினைகள் காணப்படுகின்ற நிலையில் நாளை எவ்வாறு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பதல்ல பிரச்சினை. இன்று நாடு காணப்படுகின்ற நிலைமையில் மக்களின் வறுமை, பொருளாதார நெருக்கடி, விவசாயிகள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினை என அனைத்தில் இருந்தும் எவ்வாறு மேலெழுவது என்பது குறித்த வேலைத்திட்டங்கள் அவசியம்.

இதற்கமையயே நாம் சுதந்திரக் கட்சியை கட்டியெழுப்பிக்கொண்டிருக்கின்றோம். இதற்கமைய எமது வேலைத்திட்டங்களை பெப்ரவரியில் வெளியிடுவோம். இதற்கமைய எம்முடன் இணைந்துகொள்ளுமாறு நாம் ஏனைய கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கின்றோம். என்னைக் கைதுசெய்யப்வோவதாக வெளியாகும் கருத்து பொய்யானது.

என்னைச் சிறைப்படுத்தும் அளசுக்கு எவ்வித காரணங்களும் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் இல்லை. என்னைச் சிறைப்படுத்துவதற்கு எவ்வித சாட்சிகளோ, காரணங்களோ இல்லை.

இதேவேளை ஜனாதிபதியின் பதவிக்காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகள் நீடிக்கவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் டயான கமகே கூறினால், அவருக்கு தலையில் ஏதோ பிரச்சினை இருக்கின்றது என்றே கருத வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.