மாணவியிடம் அமைப்புகள் வாக்குமூலம் பெற்றது தவறு..அமைச்சர் அன்பில் மகேஷ்

அரியலூர் பள்ளி மாணவியிடம் அமைப்புகள் மரண வாக்குமூலம் பெற்றது தவறு என்று இது தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். பள்ளிகளில் மதம், சாதி, அரசியல் ரீதியான பாகுபாடுகள் இருக்குக்கூடாது என்றும், இருக்கும் பட்சத்தில் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரியலூர் மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக ,தஞ்சை திருக்காட்டுப்பள்ளியில் மாணவி பயின்ற பள்ளியில்,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம், துறை சார்ந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தற்கொலை செய்த மாணவி படித்த பள்ளி கிறிஸ்தவ பள்ளியாக இருந்தாலும் அங்கு இந்துக்கள் நிறைய பேர் படிக்கின்றனர். எனவே பெற்றோர் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும், போராடும் அமைப்புகளுக்கு மதிப்பு கொடுக்கும் வகையிலும் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் உரிய தண்டனை பெற்று தரப்படும். பாகுபாடு இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். காரணம் எதுவாக இருந்தாலும், யாராக இருந்தாலும், உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கூறினார்.

மேலும், மாணவியின் மரணம் தொடர்பாக, முதற்கட்டமாக விடுதி காப்பாளர் கைது செய்யப்பட்டு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறிய அவர், மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஏதேனும் விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தால், உடனடியாக ஹெல்ப்லைன் மூலம் புகார் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து பல்வேறு புகார்களை பெற்று நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

மாணவ-மாணவிகளிடம் பள்ளி ஆசிரியர்கள் வேலை வாங்கக் கூடாது என்று எச்சரித்த அமைச்சர், இது தொடர்பாக வரும் புகார்களை அரசு விசாரித்து வருவதாகவும் தெரிவித்தார். ஜனவரி 31ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், ஊரடங்கு தொடர்பாக ஆலோசனை கூட்டத்தில் மருத்துவ நிபுணர்கள் அளிக்கும் கருத்துக்களின் அடிப்படையில் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.