நாட்டை முடக்க இடமளிக்க வேண்டாம்! அனுராதபுரத்தில் மக்களைத் திரட்டிக் கதறிய கோட்டாபய

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலின் மத்தியில் நாட்டை மீண்டும் மூடுவதற்கு இடமளிக்க வேண்டாம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கோரிக்கை விடுத்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுப் பேரணிகளின் ‘முதலாவது பொதுஜன பேரணி’ நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் தலைமையில் அநுராதபுரம் சல்காது மைதானத்தில் இன்று பிற்பகல் இந்தப் பொதுக் கூட்டம் இடம்பெற்றது.

இதில் மஹா சங்கத்தினர், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், வடமத்திய மாகாண ஆளுநர், இராஜாங்க அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், நகர சபை, பிரதேச சபைத் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்தொகையானோர் கலந்துகொண்டனர்.

சமூக இடைவெளி உள்ளிட்ட எந்தச் சுகாதார நடைமுறையும் இதில் பின்பற்றவில்லை எனக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது உரையாற்றிய ஜனாதிபதி,

“உரம் அல்லது உரம் இல்லாமலேயே விவசாய சமூகத்தின் வருமானத்தை நூறு வீதம் அதிகரிப்பேன் என்பதைக் கூறிக்கொள்கின்றேன். இன்று நெல்லுக்குச் சிறந்த விலை உள்ளது.

அபகரிக்கப்பட்ட நிலங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. விவசாய சமூகத்துக்காக என்னை அர்ப்பணிக்க நான் தயாராக இருக்கின்றேன் என்ற உறுதிமொழியையும் வழங்குகின்றேன்.

விவசாயத்துக்கு எதுவும் செய்யாதவர்கள் இன்று விவசாயிகளை ஏமாற்றி, நாட்டைப் பாதாளத்துக்கு இழுக்க முயற்சிக்கின்றனர்.

பயங்கரவாதிகளிடமிருந்து இந்த நாட்டை மஹிந்த ராஜபக்ச மீட்டார். அதன்பின்னர் வேகமாக அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டன. எனினும், 2015 இல் போலியான தகவல்கள் மூலம் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. தேசிய பாதுகாப்பு பலவீனப்படுத்தப்பட்டது. இராணுவத்தினர் காட்டிக்கொடுக்கப்பட்டனர். பிக்குகள் நீதிமன்றம் அழைத்துச் செல்லப்பட்டனர். இந்நிலைமையை நாம் மாற்றியமைத்தோம். தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய மரபுரிமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன.

அனைவரும் மூன்றாவது தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுங்கள். நாட்டை மீண்டும் முடக்குவதற்கு இடமளிக்க வேண்டாம்” – என்றார்.

இந்தக் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மிகவும் ஆவேசமாக உரையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.