குவியல் குவியலாக சடலங்கள்! ரஷ்ய ராணுவம் அட்டூழியம்.

உக்ரைன் நாட்டில் கடந்த பிப். கடைசி வாரம் தொடங்கிய போர் இன்னும் கூட முடிவுக்கு வரவில்லை. ஒரு மாதத்திற்கு மேலாக உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்களைக் குறி வைத்து ரஷ்யா தீவிரமாகத் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்தப் போர் காரணமாக உக்ரைன் பொதுமக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். பல ஆயிரம் பேர் அகதிகளாக வெளியேறி உள்ள நிலையில், பல லட்சம் பேர் தங்கள் வாழ்விடங்களை இழந்துள்ளனர்.

கடந்த வாரம் துருக்கியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இரு தரப்பிற்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து கீவ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ரஷ்ய ராணுவம் வெளியேறி வருகிறது. ரஷ்ய ராணுவம் வெளியேறத் தொடங்கிய பின்னர் தான், அங்கு எந்தளவுக்குப் போர்க் குற்றங்கள் நடந்துள்ளது என்பது தெரிய வருகிறது. சாதாரண உடையில் ஆயுதங்கள் இல்லாமல் இருக்கும் பொதுமக்களையும் கூட ரஷ்யா ராணுவம் கொடூரமாகச் சுட்டுக் கொன்றுள்ளது.

குறிப்பாக புச்சா நகரில் தெருவெல்லாம் சடலங்கள் இருக்கும் படங்கள் வெளியாகி இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் அப்பாவி பொதுமக்கள் முதுகுக்குப் பின்னால் கட்டப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது. மேலும், குண்டு பாய்ந்த காயத்தைப் பார்க்கும் போது, அது மிக அருகில் இருந்து சுடப்பட்டது போலத் தெரிவதாக ராணுவத்தினர் தெரிவித்தனர்.

மேலும், கீவ்விற்கு வெளியே அமைந்துள்ள புச்சா பகுதியில் ஒரே புதைகுழியில் கிட்டத்தட்ட 300 பேர் புதைக்கப்பட்டதாகவும் மேயர் அனடோலி ஃபெடோருக் தெரிவித்துள்ளார். இது தொடர்பான சாட்டிலைட் படங்களும் இணையத்தில் வெளியாகி உள்ளது. புச்சாவில் நடந்துள்ளதை இனப்படுகொலை என்று விவரித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ரஷ்யப் படைகளின் போர்க்குற்றங்கள் பற்றி விவாதிக்கப்படும் என்றார். இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டுகளை ரஷ்யா திட்டவட்டமாக மறுத்துள்ளது. போர் தொடங்கியதில் இருந்து இங்கு என்ன தான் நடந்தது என்பதைப் பார்க்கலாம்.

கீவ் நகருக்கு வெளியே 36,000 மக்கள் வசிக்கும் நகரம் புச்சா. இது கீவ் நகரில் இருந்து வடமேற்கே 16 மைல் தொலைவில் அமைந்துள்ளது. ரஷ்ய ராணுவம் கீவ் நகரை நோக்கி முன்னேறும்போது, இந்த புச்சா நகர் தான் முக்கிய போர்க் களமாக மாறி இருந்தது. ரஷ்ய ராணுவத்தை இந்த நகரில் வைத்துத் தான் உக்ரைனால் கட்டுப்படுத்த முடிந்தது. ரஷ்ய ராணுவத்தைத் தடுத்து நிறுத்த இந்த நகரில் இருக்கும் பாலத்தை உக்ரைன் வெடி வைத்துத் தகர்ந்து இருந்தது.

இப்படி ரஷ்ய ராணுவத்தைத் தடுத்து நிறுத்த புச்சா நகரைத் தான் உக்ரைன் முக்கியமாகப் பயன்படுத்தியது. கடந்த சில வாரங்களாக இந்த புச்சா நகர் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. அப்போது இங்குள்ள ஒரு வீட்டின் பேஸ்மெண்ட்டை தான் ரஷ்ய வீரர்கள் சித்திரவதை செய்யும் அறையாகப் பயன்படுத்தியதாகவும் உக்ரைன் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த இடத்தில் வைத்து மட்டும் 100க்கும் மேற்பட்டோர் ரஷ்யா ராணுவம் கொன்றுள்ளதாக உக்ரைன் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரிட்டன், உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.தற்போது வரை வெளியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வைத்துப் பார்க்கும் போது, புச்சா நகரில் ரஷ்யா போர்க் குற்றங்களைப் புரிந்துள்ளது தெளிவாகத் தெரிகிறது. ஆயுதம் இல்லாத பல நூறு உக்ரைன் மக்களைத் தெரிந்தே ரஷ்ய ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது. அதேநேரம் புச்சா நகரில் இனப்படுகொலை நடந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்றே உக்ரைன் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இருக்கும் ஆதாரங்களைக் கொண்டு ரஷ்ய அதிபர் புதின் மீது நடவடிக்கை எடுக்க முடியும். இருப்பினும், சர்வதேச நீதிமன்றத்திற்கு ரஷ்யாவில் எந்த அதிகாரமும் இல்லை. மேலும், புதினே விருப்பப்பட்டு நாட்டை விட்டு வந்து விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கவும் வாய்ப்பில்லை என்பதால் இந்தப் போர்க் குற்றங்கள் உண்மையானவையாக இருந்தாலும் புதின் மீது நடவடிக்கை எடுக்க முடியாத சூழலே உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.