சென்னைக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அபார வெற்றி.

15வது ஐபிஎல் தொடரின் 68வது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.

மும்பை Brabourne மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பவர்ப்ளே ஓவர்களில் அதிரடியாக விளையாடி 72 ரன்கள் குவித்தாலும், பவர்ப்ளே ஓவர்களுக்கு பிறகு ஒரு ஓவரில் கூட அதிரடியாக விளையாடாமல் சொதப்பியதால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 150 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக மொய்ன் அலி 93 ரன்கள் எடுத்தார்.

இதன்பின் 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு, அந்த அணியின் ஒரு துவக்க வீரரான பட்லர் 2 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், மற்றொரு துவக்க வீரரான யசஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 59 ரன்கள் எடுத்து கொடுத்தார்.

சஞ்சு சாம்சன் (15), தேவ்தட் படிக்கல் (3), சிம்ரன் ஹெட்மயர் (6) போன்ற சீனியர் பேட்ஸ்மேன்கள் விரைவாக விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், ஐந்தாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ரவிச்சந்திர அஸ்வின் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 23 பந்துகளில் 3 சிக்ஸர் மற்றும் 2 பந்துகளுடன் 40 ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் 19.4 ஓவரில் இலக்கை எட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இந்த தோல்வியின் மூலம் நடப்பு தொடரில் தனது 10வது தோல்வியை சந்தித்த சென்னை அணி, தோல்வியுடன் இந்த தொடரில் இருந்தும் விடைபெற்றுள்ளது. சென்னை அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 24ம் தேதி நடைபெற இருக்கும் முதல் குவாலிபயர் போட்டியில் குஜராத் அணியை எதிர்கொள்ள உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.