இன்று நாடாளுமன்றம் வந்தார் ஜனாதிபதி; ‘கோ ஹோம் கோட்டா’ கோஷத்தால் பரபரப்பு 10 நிமிடங்களுக்குச் சபை அமர்வு ஒத்திவைப்பு.

தனக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்ததை அடுத்து நீண்ட நாட்களாக வெளியே தலைகாட்டாமல் இருந்து வந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச, இன்று நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டார்.

இன்று முற்பகல் 10 மணிக்கு நாடாளுமன்றம் கூடிய நிலையில், 10.05 மணியளவில் ஜனாதிபதி சபைக்குள் பிரவேசித்தார்.

இதன்போது நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் அது தொடர்பான வேலைத்திட்டங்கள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில் தெளிவுபடுத்தி உரையாற்றிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், எதிரணியினர் தமது ஆசனங்களிலிருந்து திடீரென எழும்பி ‘கோ ஹோம் கோட்டா’ என ஜனாதிபதிக்கு எதிராகப் பல்வேறு கோஷங்களை எழுப்பியும், பதாகைகளை ஏந்தியும் சபைக்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் சபையில் அமைதியின்மை ஏற்பட்ட நிலையில், பிரதமரின் உரை முடிவடைந்ததும் சபை நடவடிக்கைகளை 10 நிமிடங்களுக்குச் சபாநாயகர் ஒத்திவைத்தார்.

ஜனாதிபதியை நீண்ட நாட்களாக வெளியில் காணவில்லை என்றும், அவர் எங்கே இருக்கின்றார்? அல்லது அவர் உயிருடன் இருக்கின்றாரா? என்பதையாவது அரசு கூற வேண்டும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. நளின் பண்டார, நாடாளுமன்றில் நேற்று அரசிடம் கோரியிருந்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான கேள்விகளின்போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றும்போதே நளின் பண்டார எம்.பி. இவ்வாறு கோரியிருந்தார்.

இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச இன்று நாடாளுமன்றத்துக்கு வருகை தந்து அமர்வில் கலந்துகொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.