பிரதமரின் இல்லம் தீ வைப்பு: பலரும் கண்டனம்.

கொழும்பு, கொள்ளுப்பிடியிலுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பிரத்தியேக இல்லம் நேற்று மாலை தீவைக்கப்பட்டமைக்குப் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அனைத்து வகையான வன்முறைகளையும் மன்னிக்கக் கூடாது என்றும், குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, எம்.ஏ. சுமந்திரன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்நாட்டு, வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினர் ஆகியோர் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் இடம்பெற்றபோது ஒரு பெரிய கும்பல் பொலிஸ் மற்றும் படையினருடன் மோதிய சம்பவமும் பதிவாகியிருந்தது.

அதேநேரத்தில் பொலிஸார் போராட்டக்காரர்களைக் கலைக்க கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர்.

இதையடுத்து, வீட்டின் சுவர்களைத் தாண்டியும் தடுப்புகளை உடைத்தும் உள்ளே சென்ற ஒரு சிலர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டுக்குத் தீ வைத்தனர்.

அதேவேளை, தீ வைப்புச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.