இழுபறியாகும் கோத்தபாய ராஜபக்சவின் ராஜினாமா முடிவு சபாநாயகரிடம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரியவருகிறது. அதை சரிபார்த்த பின் கோத்தபாய ராஜபக்சவின் ராஜினாமாவை சபாநாயகர் நாளை (14) அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் ஜனாதிபதி கோட்டாபய இறங்கிய உடனேயே இந்தக் கடிதம் அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், சம்பந்தப்பட்ட கடிதம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட சட்ட நடவடிக்கைகள் முடிக்கப்பட வேண்டும் என்றும் அதற்கு சிறிது காலம் எடுக்கும் என்றும் வட்டாரங்கள் கூறுகின்றன.

குறித்த இராஜினாமா கடிதத்தை எதிர்வரும் 13ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு முன்னர் வழங்குவதாக ஜனாதிபதி தெரிவித்ததாக சபாநாயகர் முன்னர் குறிப்பிட்டார்.

இதேவேளை, இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனிப்பட்ட விஜயமாக சிங்கப்பூர் செல்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர் புகலிடம் கோரவில்லை எனவும், வேறு எந்த பாதுகாப்பும் வழங்கப்படவில்லை எனவும் அமைச்சு அறிவித்துள்ளது. எனவே பொதுவாக சிங்கப்பூருக்கு நுழையும் ஒருவருக்கு 14 நாட்கள் தங்குவதற்கான வீசா வழங்கப்படுவதுண்டு. அதற்கு மேல் தங்க வேண்டிய தேவை இருந்தால் அதற்கான காரணங்களை கூறி தங்கும் காலத்தை நீடிக்க விண்ணப்பம் செய்ய முடியும். அவர்கள் கூறும் காரணங்கள் ஏற்புடையதாக இருப்பின் வீசா கால நீடிப்பு வழங்கப்படும். அது குடிவரவு – குடியகல்வு பகுதி எடுக்கும் முடிவிலேயே தங்கியுள்ளது.

பொதுவாக, புகலிடக் கோரிக்கைகளுக்கு வாய்ப்பளிக்காத நாடாக சிங்கப்பூர் கருதப்படுகிறது.

புதுப்பிப்பு 08.30 PM:

கோத்தபாய ராஜபக்ஷவின் இராஜினாமா கடிதம் கிடைத்துள்ளதாக சபாநாயகர் அலுவலகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இது தொடர்பான கடிதம் இ-மெயில் மூலம் கிடைத்துள்ளது, அதன்படி துல்லியம் சரிபார்க்கப்பட்டு, பதவி விலகல் குறித்து நாளை (14) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

இதேசமயம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச , மாலைதீவை விட்டு வெளியேறியதை அந்நாடு உறுதிப்படுத்தியுள்ளது

Leave A Reply

Your email address will not be published.