ராஜபக்சவினரின் புதையல்களை பாதுகாக்கும் இரண்டு பைரவர்கள் : உபுல் ஜோசப் பெர்னாண்டோ

ரணிலை கோத்தா பிரதமராக நியமித்த போது, ​​நாட்டை மட்டுமல்ல, உலகையே ஆச்சரியப்படுத்தும் வகையில், புதிய பிரதமரை சந்திக்க வந்த முதல் வெளிநாட்டு இராஜதந்திரி மாலத்தீவு சபாநாயகர் முகமது நஷீத்.

திவாலான இலங்கைக்கு வெளிநாட்டு உதவிகளை கொண்டு வரப் போகும் இடைத்தரகர் என்று அவரை ரணில் பெயரிட்டார்.

மறுநாள் மாலைதீவில் உள்ள ஒரு ஊடகம் நஷீத்தின் இலங்கைப் பயணம் குறித்து அருமையான கட்டுரை ஒன்றை வெளியிட்டது. அந்தக் கட்டுரையின் ஒரு பகுதி கீழே,
ஆதாரங்களின்படி, நஷீத் கடந்த சில நாட்களுக்கு முன்பு இலங்கைக்கு விஜயம் செய்து இலங்கையின் சக்திவாய்ந்த அரசியல் பிரமுகர்களைச் சந்தித்து ராஜபக்சே குடும்பம் இலங்கையை விட்டு வெளியேற பாதுகாப்பான வழியைத் தயாரிப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்தினார். பிரதமர் பதவியை இராஜினாமா செய்த மஹிந்த முதலில் நஷீத்தை தொலைபேசியில் அழைத்தார். இலங்கையில் அமைதியான சூழல் ஏற்படும் வரை தனது குடும்பத்தினரை மாலைதீவில் தங்க அனுமதிக்குமாறு மகிந்த கேட்டுக் கொண்டார்.

நஷீத் வேலையை ஏற்றுக்கொண்டார். மாலத்தீவில் வசிக்கும் கோடீஸ்வரர் மூலம் ராஜபக்சே குடும்பத்திற்கு 12 மில்லியன் அமெரிக்க டாலர் அரண்மனையையும், ராஜபக்சேவின் மெய்ப்பாதுகாவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு 3 மில்லியன் அமெரிக்க டாலர் அரண்மனையையும் வாங்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதற்கு முன்னதாக, ராஜபக்ச குடும்பத்தை தனது அரண்மனையில் பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக, மாலைதீவு சுற்றுலா வர்த்தகத்தில் கோடீஸ்வரரான தனது நெருங்கிய நண்பரான முஹம்மது மூசாவுடன் மகிந்த பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

ஆனால் முஹம்மது மூசாவை நம்ப முடியாது என நஷீட் மஹிந்தவிடம் தெரிவித்தார். அதன் பின்னரே நஷீத்தின் உதவியை மஹிந்த நாடினார். நஷீத், மகிந்த மற்றும் ராஜபக்ச குடும்பத்தினர் பாதுகாப்பாக இருக்க உத்தேசித்துள்ள அரண்மனையை வைத்திருக்கும் கோடீஸ்வரரும் நாட்டின் நிதி மோசடிக்கு உடந்தையாக உள்ளார். இந்த அரண்மனையில் நீச்சல் குளம் மற்றும் உடற்பயிற்சி கூடம் போன்ற ஆடம்பர வசதிகள் உள்ளன.

ராஜபக்ச குடும்பத்திற்கு நஷீத் செய்த உதவிக்கு பிரதி உபகாரமாக நஷீத்தின் அரசியல் பணிகளுக்கு பெரும் தொகையை வழங்க ராஜபக்ச குடும்பத்தினர் ஒப்புக்கொண்டுள்ளனர்.

நஷீத்துக்கும் ராஜபக்சேவுக்கும் இடையிலான உறவு நீண்ட காலமாக இருந்து வருகிறது.

நஷீதின் கட்சி இலங்கையில் நிறுவப்பட்டது.

அப்போது, ​​மாலத்தீவு அதிபர் அப்துல் கயூம், நாட்டில் அரசியல் கட்சிகளை நிறுவ தடை விதித்தார். நஷீத் இலங்கைக்கு வந்து இலங்கையில் இயங்கி வரும் வெளிநாட்டு ஊடகங்களை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தனது கட்சியை உருவாக்கி அதற்கான பிரசாரங்களை ஆரம்பித்தார்.

அது 2003 இல். அப்போது ரணில் பிரதமராக இருந்தார். எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த. ரணில் மற்றும் மகிந்தவின் அரசியல் நட்பு நஷீட்டின் அரசியல் பிரச்சாரத்திற்கு உதவ பெரும் பலமாக இருந்தது.

2005ல் மகிந்த அதிபரானபோதும் நஷீத் இலங்கையில் அதிக ஆதரவைப் பெற்றார். 2008 மாலைத்தீவு ஜனாதிபதித் தேர்தலில் நஷீத் தரப்புக்கு மஹிந்த நிதியுதவி வழங்கியுள்ளார். ராஜபக்ச குடும்பமும், நஷீத் குடும்பமும் இலங்கை மற்றும் மாலத்தீவு ஆட்சிகளின் போது தங்கள் குடும்பங்களைச் சேர்ந்தவர்களை அதிகாரப் பதவிகளில் நியமித்து ஆட்சி செய்கின்றனர்…’

‘மாலத்தீவு ஜர்னல்’ நாளிதழில் வெளியான கட்டுரை இது.

இந்தக் கட்டுரையைப் பார்த்த நஷீத், அதில் உள்ள உண்மைகள் பொய்யானவை என்று ட்விட்டரில் செய்தி வெளியிட்டிருந்தார்.

ஆனால் அது உண்மை என்பது இன்று நிரூபணமாகியுள்ளதாக, ‘எம்பயர் ஆன்லைன் நியூஸ்’ என்ற மாலத்தீவு இணையதளம் கடந்த வாரம் செய்தி வெளியிட்டிருந்தது.

மாலைத்தீவுக்கு கோட்டாபய பாதுகாப்பாக வருவதற்கு நஷீட்தான் உதவியதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கோட்டாபய இலங்கை விமானப்படையின் விமானத்தில் மாலைதீவில் தரையிறங்கவிருந்த போது , மாலைதீவு சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து நஷீத் தலையிட்டு அனுமதித்ததாக அந்த இணையத்தளம் தெரிவிக்கிறது.

மாலத்தீவு முழுவதும் நஷீத்துக்கு எதிரான போராட்டங்கள் தொடங்கியுள்ளதாகவும், இலங்கையை அழித்த சர்வாதிகாரிக்கு அடைக்கலம் கொடுத்து மாலத்தீவை இரண்டாவது தாய் நாடாக கருதும் இலங்கை மக்களை நஷீத் ஆத்திரப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

மாலத்தீவில் ஊழல் சர்வாதிகாரிகளை விரட்டியடிக்கும் போராட்டத்திற்கு இலங்கை ஆதரவளித்ததாகவும், ஆனால் சர்வாதிகாரிகள் மற்றும் ஊழல்வாதிகளிடம் இருந்து நாட்டை விடுவிக்க இலங்கை மக்கள் நடத்திய போராட்டத்திற்கு மாலைதீவு அரசு துரோகம் இழைத்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘இலங்கையில் லட்சக்கணக்கான மக்கள் பட்டினி கிடக்கும் போது, ​​மாலத்தீவுக்கு ஒருவரின் பாதுகாப்பு எப்படி முக்கியமானதாக இருந்தது…?’

மாலைதீவின் பிரதான தேசிய பத்திரிகை ஆசிரியர் இவ்வாறு கூறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கோத்தபாவுக்கு அடைக்கலம் வழங்கியமைக்கு மாலைதீவின் பிரதான எதிர்க்கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. மாலைதீவு அரசாங்கம் கோட்டாபயவிற்கு எவ்வாறு பாதுகாப்பு வழங்கியது என கேள்வி எழுப்பி மாலைதீவு தேசிய கட்சி பாராளுமன்றத்தில் பிரேரணையை சமர்ப்பித்துள்ளது.

நஷீத் , மகிந்த மற்றும் நாமலின்  நெருங்கிய நண்பர். மாலைதீவுக்கு நாமல் நீர் விளையாட்டு செய்ய வந்த போது நஷீட் , நாமலை மாலைதீவு ஜனாதிபதியை சந்திக்கவும் ஏற்பாடு செய்தார்.

மாலத்தீவின் தற்போதைய ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்துகொண்ட போது, ​​ மைத்ரி காலத்தில் , அரசியலமைப்பு சதி மூலம் மஹிந்த பிரதமராகியிருந்தார். ஆனாலும்  பதவியேற்பு விழாவிற்கு நஷீட் நாமலுக்கு விசேட அழைப்பை விடுத்தார்.

2012 பெப்ரவரி 07 அன்று மாலத்தீவு அதிபராக இருந்த நஷீத்துக்கு எதிராக இன்று ராஜபக்சேவுக்கு எதிராக மாபெரும் மக்கள் போராட்டம் நடத்தப்பட்டது போல போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

நஷீத் , நாட்டின் ஆளுநரை கைது செய்ய உத்தரவிட்டதும் மக்கள் வீதிக்கு வந்தனர்.

ராஜபக்ஷவைப் போலவே நஷீதும் ஜனாதிபதி பதவியிலிருந்து விலக வேண்டியிருந்தது. அப்போதைய நிலையில்  பாதுகாப்பு கருதி நஷீத் இலங்கைக்கு தப்பிச் சென்றார்.

2015 ஆம் ஆண்டு, அவர் மீது பயங்கரவாதத்திற்கு ஊக்கமளித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அவர் கைது செய்யப்பட இருந்தபோது, ​​அவர் இலங்கைக்கு தப்பிச் சென்றார். 2012 இல் மஹிந்த ஜனாதிபதியாக இருந்து அவருக்கு உதவினார். 2015 ரணில் பிரதமர் பதவியில் இருந்து உதவி செய்தார்.

ராஜபக்ச குடும்பம் ,  நஷீத் மற்றும் ரணில் ஆகியோரது முக்கோண உறவு இப்போது  தெளிவாகிவிட்டது.

நாமலுக்கு முடிசூட்டி மீண்டும் மன்னராக்குவதுதான் இந்த முக்கோணத்தின் நோக்கம்.

அதன்படி  நஷீத் , கோட்டாவை பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், ரணில் இலங்கையின் தற்காலிக ஜனாதிபதியாகிறார்.

இலங்கை வரலாற்றில் முற்காலத்தில் அரசர்கள் தமது பொக்கிஷங்களை தம் மரணத்திற்குப் பின்  பாதுகாக்க ஒரு பைரவரிடம் ஒப்படைத்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

ராஜபக்ச குடும்பத்தின் பொக்கிஷங்களை  காக்க , ராஜபக்ச   குடும்பத்தினரால்  இலங்கையில்  ஒப்படைக்கப்பட்ட பைரவர்  ரணில். வெளிநாட்டில் இருக்கும் பைரவர்  நஷீத்.

  • உபுல் ஜோசப் பெர்னாண்டோ
    தமிழில் : ஜீவன்

Leave A Reply

Your email address will not be published.