குரங்கு அம்மை அறிகுறிகள்.

குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்னென்ன அறிகுறிகள் தென்படும்; அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் செய்ய வேண்டியவை குறித்து வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

குரங்கு அம்மை என்பது ஒரு அரிய வகை தொற்று நோய். இது மனிதர்களுக்கு இடையே எளிதில் பரவாது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட விலங்குகளிடமிருந்தே மனிதர்களுக்குப் பரவுகிறது.

இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களில், 10ல் ஒருவர் இறக்க வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பரவலை, சர்வதேச பொது சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனாலும் முறையான சிகிச்சைகள் மேற்கொண்டால் உயிரிழப்பை தடுக்கலாம்.

முதலில் ஆப்ரிக்க நாடுகளில் மட்டுமே இந்த நோய் பாதிப்பு இருந்தது. சமீப காலமாக, உலகம் முழுதும் 75 நாடுகளில், 16 ஆயிரம் பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எமது அண்டை நாடான இந்தியாவில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்திருக்கிறது.

குரங்கு அம்மையால் பாதிப்பு ஏற்பட்டால் தென்படும் அறிகுறிகள் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதன் விபரம்:

குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டோருக்கு முதலில் காய்ச்சல் ஏற்படும்.

அதன் பின் உடலில் தடிப்புகள் ஏற்படும்.

இது, முகத்தில் இருந்து உள்ளங்கால் வரை பரவும்.

தலைவலி, தசை வலி, உடல் சோர்வு உண்டாகும். தொண்டை வலி மற்றும் இருமல் இருக்கும்.

குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், உடனடியாக தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த நேரத்தில் மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மக்கள் அச்சப்பட தேவையில்லை. குரங்கு அம்மை தீவிர தொற்று நோய் அல்ல. வெளிநாடுளில் இருந்து நாடு திரும்புபவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

ஐரோப்பிய நாடான டென்மார்க்கைச் சேர்ந்த ஒரு நிறுவனம் தயாரிக்கும், ‘இமான்வேக்ஸ்’ தடுப்பூசி பெரியம்மை நோய்க்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இதே தடுப்பூசியை குரங்கு அம்மை நோய்க்கும் பயன்படுத்த நேற்று ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த இரு நோய்களையும் ஏற்படுத்தும் வைரஸ்கள் இடையே பொதுவான குணாதிசயங்கள் உள்ளன என்பதால், விஞ்ஞானிகளின் ஆலோசனைப்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.