அரகலய மதகுரு ஜீவந்த பீரிஸை தேடும் பொலிஸ் நடவடிக்கைக்கு கடும் கண்டனம்

நெருக்கடியில் சிக்குண்டுள்ள இலங்கையில் அரசாங்கத்திற்கு எதிராக இடம்பெறும் ஆர்ப்பாட்டங்களின் முக்கிய நபர்களில் ஒருவராக கருதப்படும் கத்தோலிக்க மதகுருவை தேடி கிறிஸ்தவ தேவாலயமொன்றில் பொலிஸார் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டமைக்கு மனித உரிமை செயற்பாட்டாளர்களும் கிறிஸ்தவ மதகுருமார்களும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

சப்பிரஸ்கமுவ மாகாணத்தின் இரத்தினபுரியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்கு சென்ற பொலிஸார் கிறிஸ்தவ மதகுரு அருட்தந்தை அமிலஜீவந்த பீரிஸ் அங்கிருக்கின்றாரா என சோதனையில் ஈடுபட்டனர் என ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஜூன் ஆர்ப்பாட்டங்களின் போது சட்டவிரோதமாக ஒன்றுகூடியது பொதுச்சொத்திற்கு சேதம் விளைவித்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 45 வயது கிறிஸ்தவ மதகுருவும் ஏனைய ஐவரும் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு நீதிமன்றம் தடைவிதித்து இரண்டு நாட்களின் பின்னர் இந்த சோதனை நடவடிக்கை இடம்பெற்றது.

நாட்டின் மோசமான பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என குற்றம்சாட்டப்பட்ட நீண்டகாலம் ஆட்சிபுரிந்த ராஜபக்ச வம்சாவளியை ஆட்சியிலிருந்து அகற்றிய கொழும்பு காலிமுகத்திடலில் இடம்பெற்ற அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் முன்னணியில் அருட்தந்தை காணப்பட்டார்.

பாரிய ஆர்ப்பாட்டம் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தப்பியோடுவதற்கும் பதவிவிலகுவதற்கும் காரணமாக அமைந்தது,கடந்த வாரம் நாடாளுமன்றம் பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தது,எனினும் ரணில்விக்கிரமசிங்க பதவி விலகவேண்டும் என கோரும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்துள்ளன,ரணில்விக்கிரமசிங்க ராஜபக்ச வம்சாவளியின் விசுவாசி என தெரிவிக்கப்படுகின்றது.

அருட்தந்தை பீரிசிற்கு எதிரான பொலிஸ் நடவடிக்கைகள் முற்றாக ஏற்றுக்கொள்ள முடியாதவை என மனித உரிமை செயற்பாட்டாளர் ருக்கி பெர்ணாண்டோ தெரிவித்தார்.

Ruki Fernando

இனரீதியாக பிளவுபட்டுள்ள இலங்கையின் தசாப்தகால உள்நாட்டு யுத்தத்தினால் மோசமாக பாதிக்கப்பட்ட சிறுபான்மை தமிழர்கள் அதிகமாக வாழும் வடக்குகிழக்கு சமூகங்கள் மத்தியில் பணியாற்றிய மிகக்குறைந்தளவு எண்ணிக்கையிலான சிங்கள மதகுருமார்களில் ஜீவந்த பீரிசும் ஒருவர் என ருக்கி பெர்ணான்டோ தெரிவித்தார்.

அருட் தந்தை ஜீவந்தபீரிஸ் தமிழ் மதருமார்கள் மதத்தவர்கள் மற்றும் சாதாரண தமிழ்மக்களால் பெரிதும் நேசிக்கப்படுபவர் எனவும் ருக்கி பெர்ணாண்டோ தெரிவித்தார்.

மக்களின் போராட்டத்திற்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பிற்காக அவர் பழிவாங்கல்களை எதிர்கொள்கின்றார்,அவர் ஏனையவர்களிற்கு ஆதரவு வழங்கியபோது போல கிறிஸ்தவ மததலைவர்களும் ஏனையவர்களும் அவருக்கு ஆதரவு வழங்க முன்வரவேண்டும் எனவும் ருக்கி பெர்ணாண்டோ யுசிஏ நியுசிடம் தெரிவித்தார்.

பொலிஸாரின் ஈவிரக்கமற்ற தன்மையினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு உதவும் விடயத்தில் பெர்ணான்டோ அருட்தந்தையுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.சமீபத்தில் மக்கள் ஆர்ப்பாட்டத்திலும் அவருடன் இணைந்து செயற்பட்டுள்ளார்.

அருட்தந்தை இரத்தினபுரிமறை மாவட்டத்தில் மிகவும் வறிய திருச்சபையில் பணியாற்றுகின்றார்,தோட்டத்தொழிலாளர்களுடன் இணைந்து செயற்படும் அவர் வறிய குழந்தைகளிற்கு கல்வி கற்பிக்கின்றார் எனவும் ருக்கி பெர்ணாண்டோ தெரிவித்தார்.

அவர் கொழும்பிற்கும் ஏனைய பகுதிகளிற்கும் விஜயம் மேற்கொண்டு நீதி உரிமைக்கான மக்கள் போராட்டத்திற்கு ஆதரவளிப்பது வழமை எனவும் ருக்கி பெர்ணாண்டோ குறிப்பிட்டார்.

சக மதகுருவை கைதுசெய்வதற்கான முயற்சியால் நான் அதிர்ச்சியடைந்துள்ளேன் என இரத்தினபுரியை சேர்ந்த கிறிஸ்தவ மதகுரு ஹரிகரன் இராஜப்பிரியர் தெரிவித்தார்.

அருடதந்தை மகாத்மா காந்தியின் அகிம்சை இயக்கத்தை நேசித்தவர் நெல்சன் மண்டேலாவின் எதிர்ப்பு போராட்டத்தையும் நேசித்தவர் என இராஜப்பிரியர் குறிப்பிட்டார்.

ஒரேமறைமாவட்டத்தை சேர்ந்த இருவரும் 24 வருட நண்பர்கள்,

வறிய மக்கள் வாழ்வதற்கான உரிமையை கோரி ( எரிபொருள் உணவு ) போராடினார்கள் ஆட்சியாளர்கள் கடந்த 74 வருடங்களாக நாட்டை மோசடிசெய்துள்ளனர்,அவர்கள் அப்பாவி ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்தக்கூடாது கைதுசெய்யக்கூடாது மாறாக இலங்கையர்களிற்கு அடிப்படை வசதிகளை வழங்குவது குறித்து சிந்திக்கவேண்டும் என அவர் தெரிவித்தார்.

அரசபயங்கரவாதத்தை அப்பாவி மக்கள் மீது பயன்படுத்துவதை அரசியல்வாதிகள் கைவிடவேண்டும் என அவர் தெரிவித்தார்.

நான் தொடர்ச்சியாக அருட்தந்தைக்காக பிரார்த்தனை செய்கின்றேன் அவரை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பேன் என இரத்தினபுரி மறைமாவட்டத்தை சேர்ந்த தெரிவித்தார்

நாங்கள் அவரை பாதுகாக்கவேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.