ஆஸ்திரேலியா வரை சென்ற படகு – திருப்பி அனுப்பிய அதிகாரிகள்..

படகில் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய எத்தனித்த 46 இலங்கையர்களை எல்லையில் வழிமறித்த அந்நாட்டுப் படையினர் அவர்களைப் பிடித்துக் கடற்படைக் கப்பல் ஒன்றில் ஏற்றிக் கொழும்புக்குக் கொண்டு சென்று கையளித்துள்ளனர். ஆஸ்திரேலியா கரையோரக் காவல் படையினர் இலங்கை அகதிகளை இவ்வாறு கப்பலில் ஏற்றிக் கொழும்புக்குக் கொண்டு சென்றிருப்பது இதுவே முதல் தடவை ஆகும்.

ஆஸ்திரேலியக் கரையோரக் காவல் படையின் “Ocean Shield” என்ற கப்பலில் ஏற்றிவரப்பட்ட 46 பேரும் நேற்றுக் காலை கொழும்புத் துறை
முகத்தில் இறக்கப்பட்டு அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டனர் என்று அறிவிக்கப்படுகிறது.

அவர்கள் அனைவரும் எல்லையில் வைத்துக் கடந்த ஜூலை 27 ஆம் திகதி பிடிக்கப்பட்ட சட்டவிரோத குடியேற்றவாசிகள் என்று ஆஸி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜுலை 7 ஆம் திகதி கிழக்கு இலங்கை வாழைச்சேனைப் பகுதியில் இருந்து புறப்பட்ட படகில் பயணம் செய்த இவர்கள் மட்டக்களப்பு, மூதூர், பிபில, பாசிக்குடா, அம்பாறை போன்ற இடங்களைச் சேர்ந்தவர்கள்
என்று தெரிவிக்கப்படுகிறது.

கொழும்புத் துறைமுகத்தில் வைத்து 46 பேரையும் இலங்கைக் குடிவரவு – குடியகல்வு அதிகாரிகளிடம் கையளிக்கும் நிகழ்வில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஆஸ்திரேலிய எல்லைக் காவல் படையின் தென்னாசியப் பிராந்தியப் பணிப்பாளர் தளபதி

கிறிஸ் வோர்டர்ஸும் (Chris Waters)
இலங்கைக் கடற்படையின் மேற்குப் பிராந்தியத் தளபதி ரியல் அட்மிரல் தம்மிக்க குமாரவும் (Dammika Kumara) கலந்துகொண்டனர். கொழும்புக்கான ஆஸ்திரேலிய தூதர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் பலரும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர்.

இலங்கையில் உருவாகியுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டில் இருந்து படகுகளில் வெளியேறுவோரது எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று வரையான காலப்பகுதியில் மொத்தம் ஆயிரத்து 24 பேர் கடலில் வைத்து வழிமறிக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று இலங்கைக் கடற்படை தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.