முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான நிலமோசடி வழக்கு ரத்து : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நில அபகரிப்பு புகாரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது பதியபட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை துரைப்பாக்கத்தில் மீன் வலை உற்பத்தி நிறுவனம் அமைந்துள்ள 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ் என்பவருக்கும் பிரச்சினை இருந்து வந்தது.

இதில் தனது செல்வாக்கை பயன்படுத்தி அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்து கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாக ஜெயகுமாருக்கு எதிராக மகேஷ் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் ஜெயக்குமார், மகள் ஜெயபிரியா மற்றும் அவரது மருமகன் நவீன்குமார் ஆகியோர் மீது கொலை மிரட்டல், சதித்திட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அவருடைய மகள் ஜெயபிரியா, மருமகன் நவீன்குமாரும் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவில் தனது மருமகனின் சகோதரர் மகேஷ் அளித்த பொய் புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கு என்றும், 2016ல் நடந்ததாக கூறப்படும் சம்பவத்திற்கு 2021ஆம் ஆண்டு தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 2016ஆம் ஆண்டு ஜெயக்குமார் அமைச்சராக இருந்ததால் புகார் அளிக்க இயலவில்லை என்று புகார்தாரர் மகேஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கில் இன்று உத்தரவு பிறப்பித்த நீதிபதி இளந்திரையன், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவரது மகள் ஜெயபிரியா மற்றும் மருமகன் நவீன் குமார் ஆகியோர் மீதான வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.