அம்பாறையில் தமிழர்களின் எதிர்காலத்தைக் குழிதோண்டிப் புதைக்கின்றார் ஹரீஸ்!

“கல்முனையில் தமிழ்ச் சமூத்தை அழிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாகத்தை முடக்குவதற்குப் பல குழுக்களை உருவாக்கியும் கிராம ரீதியான எல்லையை நிர்ணயித்தும் குளங்களை மண்போட்டு நிரப்பியும் தமிழ் மக்களின் பூர்வீக இடங்களைக் கபளீரம் செய்தும் தமிழ் மக்களின் எதிர்காலத்தைக் குழிதோண்டிப் புதைக்கின்ற செயற்பாட்டைச் செய்து வருகின்றார்.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் குற்றம் சாட்டினார்.

சொறிக்கல்முனை ஹோலிக்குறோஸ் வித்தியாலய அதிபர் மற்றும் உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்கள் ஆகியோரைக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கல்வி என்பது எட்டாக்கனியாக இருந்த காலம். அதை நாங்கள் மறக்க முடியாது. நாங்கள் கல்வியைத் தேடி கற்றவர்கள்.

இந்தப் பிரதேசத்தில் அதிபர்கள் அதிகமாக இருக்கின்றனர். இதில் சிலர் பாடசாலையின் கடமைகளைச் செய்துவிட்டு போகவேண்டும் என்ற சிந்தனையில் இருக்கின்றனர். ஆனால், இந்தப் பாடசாலையின் அதிபர் அருட்சகோதரி எஸ்.சிறியபுஸ்பம் அரசியல்வாதிகளை மாத்திரமல்ல மாகாண ஆளுநரையும் சந்தித்து பாடசாலையின் குறைபாடுகளை எடுத்துரைத்து வளங்களைத் தேடிப் பெற்ற ஒரு பெரும் சேவையாளராக இருக்கின்றார்.

சமூகத்தைச் சிறப்பாக வழிநடத்தக்கூடிய தலைவராக இவர் திகழ்வார் என்பதற்கு இன்றைய விருதுகள் சான்றாக அமைகின்றன.

சொறிக்கல்முனை மக்களால் இவ்வாறான விழா எடுக்கப்பட்டு இவருக்குப் பாராட்டுச் செய்வது உண்மையிலே பெரும் சிறப்பாக அமைந்துள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களாக இருக்கின்ற நாங்கள் குறைந்த நிலையிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எம்மை நசுக்கி ஆளுகின்ற அரசியல் தலைவர்கள், பெரும்பான்மை சிங்கள மக்களை விட சகோதர முஸ்லிம் மக்கள் மத்தியில் இருந்து கொண்டிருக்கின்றனர்.

குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் தமிழர்களுடைய எதிர்காலத்தைக் குழிதோண்டிப் புதைக்கின்ற செயற்பாடுகளிலே இருந்து கொண்டிருக்கின்றார்.

அவரின் செயற்பாட்டின் மூலம் இந்த இனங்களுக்கிடையே இருக்கின்ற ஒற்றுமை இல்லாமல் போய்விடும் நிலமை அதிகமாகவுள்ளது.

நான் ஏனைய சமூகங்களை இணைத்துப் பயணிக்கின்ற அரசியல்வாதியாக இருந்திருக்கின்றேன். அவர் இன்றும் கூட தமிழர்கள் இரட்டை வேடம் போடுகின்றனர் என்று ஓர் அறிக்கை விடுத்துள்ளார்.

நாங்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் இரட்டை வேடம் போட்டவர்கள் அல்லர்; ஒரு சமூகத்தை அழிக்கின்ற பணிகளை முன்னெடுத்தவர்கள் அல்லர். அந்தப் பணியை முன்னெடுக்கின்ற ஓர் அரசியல்வாதியே கல்முனை பிராந்தியத்தில் உள்ள நாடாளுமன்ற உறப்பினர் ஹரீஸ்.

இந்நாட்டிலே தமிழ் பேசும் இனம் என்ற அடிப்படையில் செயற்பட்டுவரும் ஒரேயொரு கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புதான். அந்தத் தமிழ் பேசும் என்பது தமிழர்களையும், முஸ்லிம்களையும் உள்ளடக்கியதாக இருக்கும்.

நாங்கள் ஒரே சிந்தனை; ஒரே கொள்கை; ஒரே கோட்பாடு. நாங்கள் வருகின்ற அரசுக்கு எல்லாம் கையை உயர்த்திவிட்டு காலில் விழுபவர்கள் அல்லர். நாங்கள் துணிகரத்தோடு உண்மையை – நியாயத்தை – அநீதியை தட்டிக்கேட்கின்ற அரசியல்வாதிகளாகச் செயற்படுகின்றோமே தவிர சலுகைகளுக்கும் துணையாக இருந்து செயற்படுபவர்கள் அல்லர் என்பதை ஹரீஸுக்கு சொல்லி வைக்கின்றேன்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.