அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்கள் தவிர்த்து வேறு எந்த தீர்மானமும் நிறைவேற்றக் கூடாது – உயர் நீதிமன்றம் உத்தரவு

அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்தது. ஆனால், வரையறை செய்த 23 தீர்மானங்கள் தவிர்த்து, வேறு எந்த தீர்மானமும் நிறைவேற்றக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.

பெரும் பரபரப்புக்கு இடையில் திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை அடுத்துள்ள வானகரத்தில் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் காலை 10 மணிக்கு கூடுகிறது. இந்த கூட்டத்துக்கு தடை விதிக்க கோரி அக்கட்சி உறுப்பினர்கள் ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிச்சாமி, தணிகாச்சலம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தாக்கல் செய்த மனுக்கள், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் நேற்று விசாரணைக்கு வந்தன.

அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் ஜி.ராஜகோபால், பி.எஸ்.ராமன் என்.ஜி.ஆர்.பிரசாத் உள்ளிட்டோர், பொதுக்குழு கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை என்றும், கடந்த 2021ம் ஆண்டு டிசம்பரில் நடந்த தேர்தலில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு 5 ஆண்டு பதவிக்காலம் உள்ள நிலையில் ஒற்றைத் தலைமை குறித்து பொதுக்குழுவில் திருத்தம் கொண்டு வர உள்ளதாகவும், மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை கொண்டு வர உள்ளதாகவும் தெரிவித்தனர்.

ஜனநாயக மரபுகளை மீறி, விதிகளை திருத்த முடியாது எனத் தெரிவித்த அவர்கள், பொதுக்குழு கூட்டத்தை நடத்தலாம் ஆனால், ஒற்றைத் தலைமை குறித்து தீர்மானம் கொண்டு வரக் கூடாது என உத்தரவிட வேண்டும் எனக் கோரினர்.

ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தரப்பில் அஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்ற உள்ள 23 தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இதை தவிர வேறு எந்த தீர்மானத்தையும் அனுமதிக்க முடியாது எனவும், கட்சி விதிகளுக்கு முரணாக செயல்படப் போவதில்லை எனவும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

மேலும், கட்சியின் ஒட்டுமொத்த நிர்வாகத்திற்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரே பொறுப்பு எனவும், பொதுக்குழுவின் நிகழ்ச்சிநிரலை இருவரும்தான் முடிவு செய்ய முடியும் எனவும் வாதிட்டார்.

எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் விஜய்நாராயண் மற்றும் ராஜகோபால் ஆகியோர், அதிமுக பொதுக்குழு கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல் ஏதும் அறிவிக்கப்பட மாட்டாது எனவும், முந்தைய காலங்களிலும் இதே நடைமுறை தான் பின்பற்றப்பட்டதாகவும் குறிப்பிட்டனர்.

மேலும், கட்சி விதிகளை திருத்தம் செய்ய பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளதாகவும், நாளையே திருத்தம் நடைபெறும் என்பது வெறும் யூகம் தான் என்றும், திருத்தங்கள் கொண்டு வரப்படலாம். கொண்டு வரப்படாமலும் போகலாம் என தெரிவித்தார். திருத்தம் என்பது 2,665 பொதுக்குழு உறுப்பினர்களின் விருப்பம் எனவும், இந்த ஜனநாயக நடைமுறையை தடுக்க முடியாது என்றும், தேவைப்பட்டால் விதிகளில் திருத்தம் செய்யும் தீர்மானத்தை எதிர்த்து வழக்கு தொடரலாம் என்றும் தெரிவித்தனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அனைத்து தரப்பினரும் பொதுக்குழு கூட்டத்தை நடத்த எந்த ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை, இருப்பினும் ஒருங்கிணைப்பாளரும், மற்ற மனுதாரர்களும் கட்சி விதிகளை திருத்தம் செய்ய, குறிப்பாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைப்பது தொடர்பான தீர்மானங்களை நிறைவேற்றவே எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதற்கான முகாந்திரத்தை நிரூபிக்கவில்லை. இதுபோன்ற தீர்மானம் நிறைவேற்றப்படும் என்ற அச்சத்தின் அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. பொதுக்குழு கூட்டத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த நீதிமன்றம் யூகித்து முன்கூட்டியே உத்தரவு பிறப்பிக்க முடியாது.

கட்சி மற்றும் சங்க விவகாரங்களில் நீதிமன்றம் பொதுவாக தலையிடுவதில்லை என தெரிவித்தார். பொதுக்குழுவில் என்ன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதை முடிவு செய்வது கட்சிதான். அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் அதனால் எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க நீதிமன்றம் விரும்பவில்லை தெரிவித்து பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி வழங்கினார்.

இந்த உத்தரவை எதிர்த்து சண்முகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இரவு 2 மணியளவில் நீதீபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் விசாரணை நடைபெற்றது. அப்போது, ஒற்றை தலைமையை ஏற்றால் தான் பொதுக்கூட்ட பாஸ் வழங்கப்படும் என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என மனுதாரர் சண்முகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஓ.பி.எஸ் தரப்பில், 23 தீர்மானத்துக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளதாகவும், இதைத் தவிர வேறு எந்த தீர்மானமும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இல்லாமல் சேர்க்க கூடாது என வாதிடப்பட்டது.

இபிஎஸ் தரப்பில், விதிகளை திருத்தி தீர்மானம் நிறைவேற்றுவதாக இருந்தாலும் அதனால் பொதுக்குழு உறுப்பினரான மனுதாரர் எந்த வகையில் பாதிப்பு ஏற்பட போகிறது என நிரூபிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. ஒபிஎஸ் பாதிப்படைவார் என்ற நோக்கில் மட்டுமே பொதுக்குழு உறுப்பினர் இந்த வழக்கை தொடந்துள்ளார் எனவும் தான் கையெழுத்திட்டால் மட்டுமே முடிவெடுக்க முடியும் என ஒபிஎஸ் செயல்படுவது தவறு என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

கடந்த 10 ஆண்டுகளில் முன்கூட்டியே அஜெண்டாவை கட்சி வெளியிட்டது இல்லை, ஓபிஎஸ் ஒப்புதல் அளித்த 23 தீர்மானங்கள் தவிர புதிய தீர்மானங்கள் நிறைவேற்றவும் பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது எனவும் இவை அனைத்தும் கட்சியின் வளர்ச்சிக்காக மட்டுமே எனவும் இபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், திட்டமிட்டபடி பொதுக்குழு நடத்தலாம், அதில் 23 தீர்மானம் மட்டும் நிறைவேற்றலாம், மற்ற விவகாரங்கள் குறித்து விவாதிக்கலாமே தவிர எந்த முடிவும் எடுக்க கூடாது என உத்தரவிட்டனர்.

இதுதொடர்பான விசாரணை, நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் அமர்வு முன்பு நள்ளிரவு தொடங்கி, அதிகாலை 4.30 மணி வரை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.