தமிழர் தேசமெங்கும் உணர்வெழுச்சி! தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் ஆரம்பம்!!

தமிழ் மக்களின் விடுதலைக்காக ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாநோன்பு இருந்து உயிர்த் தியாகம் செய்த தியாக தீபம் திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கிலும், தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் தேசமெங்கும் இன்று உணர்வெழுச்சியுடன் ஆரம்பமானது.

தியாக தீபம் திலீபன் 1987ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 15ஆம் திகதி தமிழ் மக்களுக்காக யாழ். நல்லூரில் உண்ணாநோன்பை ஆரம்பித்து 12 ஆவது நாளில் (செப்ரெம்பர் 26ஆம் திகதி) ஈகைச்சாவைத் தழுவியிருந்தார்.

அவரின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வின் பிரதான நிகழ்வு நல்லூரிலுள்ள தியாக தீபம் நினைவாலயத்தில் வழமை போன்று இம்முறையும் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் இன்று ஆரம்பமாகிய நிகழ்வு தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நினைவேந்தலின் இறுதி நாள் நிகழ்வு எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும், சிறைகளிலும், முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும், ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்பட வேண்டும், தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் என ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, தியாக தீபம் திலீபன் 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரையான 12 நாட்கள் அகிம்சை வழியில் யாழ். நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி ஈகைச்சாவைத் தழுவிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.