நீதிபதியின் பதவி விலகல்: விசாரணை நடத்த அரசுக்கு அதிகாரம் இல்லை! – நீதி அமைச்சர் கைவிரிப்பு.
“முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியின் பதவி விலகல் தொடர்பான எந்தப் பாெறுப்பையும் அரசின் மீது சுமத்த வேண்டாம். நீதிபதி தொடர்பான பிரச்சினையை விசாரணை நடத்துவதற்கு அரசுக்கோ அல்லது ஜனாதிபதிக்கோ எந்த அதிகாரமும் இல்லை. அது தொடர்பான விசாரணை நடத்தும் அதிகாரம் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவுக்கு மட்டுமே உண்டு” – என்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியின் பதவி விலகல் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ விசேட கூற்றொன்றை முன்வைத்து எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குறிப்பிடுகையில்,
“முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியின் பதவி விலகல் பாரிய விடயம். அதேபோன்று நீதிமன்றத்தின் சுயாதீனம் தொடர்பான பயங்கர விடயமாகும். நீதிபதி வழங்கிய உத்தரவுகள் காரணமாக அவருக்கு மரண அச்சுறுத்தல் உட்பட பல்வேறு அழுத்தங்கள் தொடர்பாக மிகவும் பயங்கரமான அறிவிப்பொன்றை அவர் விடுத்திருக்கின்றார். அதனால் அவரின் அறிவிப்பு தொடர்பாக சுயாதீன விசாரணை மேற்கொண்டு இதன் பின்னணியில் இருக்கும் மறைமுக சக்திகளை வெளிப்படுத்த வேண்டும்.” — என்றார்.
நீதி அமைச்சர் தாெடர்ந்து பதிலளிக்கையில்,
“முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி வெளிநாடொன்றுக்குச் சென்ற பின்னரே அவரிடமிருந்து நீதிச் சேவைகள் ஆணைக்குழுவுக்குக் கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.
அதில் அவருக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தம் மற்றும் அச்சுறுத்தல் காரணமாகத்தான் பதவி விலகுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு மன அழுத்தம், அச்சுறுத்தல் இருக்குமானால் அவர் வெளிநாடொன்றுக்குச் சென்று கடிதம் அனுப்ப வேண்டியதில்லை.
அத்துடன் நீதிபதி ஒருவருக்கு அச்சுறுத்தல் இருக்குமானால் அவ்வாறு அச்சுறுத்தல் விடுத்தவர் யாராக இருந்தாலும் அவரை நீதிமன்றத்துக்கு அழைப்பு விடுக்கலாம். பிடியாணை கட்டளை விடுக்கும் அதிகாரம் அவருக்கு இருக்கின்றது.
அதேபோன்று குறித்த நபருக்கு எதிராக வழக்குத் தொடுக்கும் அதிகாரம் நீதிபதிக்கு இருக்கின்றது. அந்த அதிகாரத்தை அவர் பயன்படுத்தாவிட்டால் அதன் பொறுப்பை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
மேலும் நீதிபதியின் பதவி விலகல் தொடர்பிலான எந்தப் பாெறுப்பையும் அரசின் மீது சுமத்த வேண்டாம். ஏனெனில் நீதிபதிகளின் ஒழுக்காற்று நடவடிக்கைகள் தொடர்பான அதிகாரம், நியமன அதிகாரம் என அனைத்தும் நிர்வகிக்கப்படுவது நீதிச் சேவைகள் ஆணைக்குழுவாலாகும். நீதிச் சேவைகள் ஆணைக்குழு அரசமைப்பின் பிரகாரம் அமைக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுவாகும்.
அதனால் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தொடர்பான பிரச்சினையை விசாரணை நடத்துவதற்கு அரசுக்கோ, ஜனாதிபதிக்கோ எந்த அதிகாரமும் இல்லை. அந்த அதிகாரம் இருப்பது நீதிச் சேவைகள் ஆணைக்குழுவுக்கு மாத்திரமாகும்.
எனவே, யாருக்காவது இது தொடர்பில் பிரச்சினை இருக்குமானால் அவர்கள் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்து, அது தொடர்பில் பதில் ஒன்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
பிரதம நீதியரசர் தலைமையிலான அந்த ஆணைக்குழுவுக்கு உத்தரவிடவோ அதில் தலையிடவோ அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஆணைக்குழு தேவையெனில் அது தொடர்பில் விசாரணை நடத்தி பதில் ஒன்றை வழங்கும்.” – என்றார்.