சிங்கப்பூருக்குச் சொந்தமான விமானம் விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழப்பு.

சிலாங்கூரின் காப்பார் நகரில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், மலேசியர்கள் இருவர் உயிரிழந்தனர்.

அவர்களில் ஒருவர் 30 வயது விமானி டேனியல் யீ. மற்றொருவர் 42 வயது பயணி ரோஷன் சிங் ரணியா என்று ‘த ஸ்டார்’ செய்தி நிறுவனம் தெரிவித்தது.

உடல்கள் விமானி அறையில் இரவு 8.05 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டதாக சிலாங்கூர் காவல்துறை தெரிவித்தது.

விபத்தின் வேகம் காரணமாக விமானத்தின் சிதைவுகள் இரண்டு மீட்டர் நிலத்தடியில் புதையுண்டதாகவும் கூறப்பட்டது.

விபத்துக்குள்ளான விமானம் இரண்டு பேர் பயணம் செய்யக்கூடிய ஒரு பொழுதுபோக்கு ரக விமானம். அது ‘ஏர் அட்வெஞ்சர் ஃபிளையிங் கிளப்’ எனும் நிறுவனத்தின் கீழ் இயங்கி வந்தது.

விமானம் கோலாலம்பூரில் உள்ள சுபாங் விமான நிலையத்தில் இருந்து பிற்பகல் 1.28 மணிக்குப் புறப்பட்டதாகவும், 1.35 மணிக்குப் பிறகு விமானத்தில் இருந்து கண்காணிப்பு அறைக்கு எந்தத் தகவலும் வரவில்லை என்றும் அதிகாரிகள் கூறினர்.

இதற்கிடையே, இருமுறை வெடிப்புச் சத்தம் கேட்டதை அடுத்து விமானம் தரையில் வீழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

‘ஏவியேஷன் சேஃப்டி டெக்னாலஜி’ நிறுவனத்திற்குச் சொந்தமான அந்த விமானம், பிப்ரவரி 20 முதல் 25 வரை நடைபெறவுள்ள சிங்கப்பூர் விமானக் காட்சிக்குத் தயாராவதற்காக பறந்ததென நிறுவனப் பேச்சாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.