நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் தேர்தல் ஆணையம் மும்முரம்…தேர்தல் ஆணையர் சென்னை வருகை

நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் சென்னையில் இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தலை வருகிற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் தயாராகி வரும் நிலையில், தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் களப்பணிகள் வேகமெடுத்துள்ளன. தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து கடந்த 6ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையர் அஜய்பாது தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடைபெற்றது. தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மற்றும் பல்துறை அதிகாரிகள் இந்த ஆலோசனையில் கலந்துகொண்டனர்.

அதனைதொடர்ந்து, தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து நேரடியாக ஆய்வு செய்ய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் 3 துணை ஆணையர்கள் நேற்றிரவு சென்னை வந்தடைந்தனர். சென்னை விமான நிலையத்தில் அவர்களை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.
இதையடுத்து இன்று காலை 11 மணியளவில் தமிழ்நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளை தலைமை தேர்தல் ஆணையர் தலைமையிலான குழு நேரில் சந்தித்து தேர்தல் தொடர்பான கருத்துகளை கேட்டறிய உள்ளது.

அதன் பின் மதியம் 2 மணியில் இருந்து இரவு 8 மணி வரை, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்கும் கூட்டம் நடைபெறவுள்ளது. அதில், மாவட்டங்களின் நிலவரம் மற்றும் தேர்தல் ஆயத்த ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்படும். இதையடுத்து நாளை காலை 9 மணியளவில், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. தொடர்ந்து வருமான வரித்துறை, சரக்கு மற்றும் சேவை வரித்துறை, அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

அதன் பின் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர், தமிழ்நாடு டிஜிபி மற்றும் அரசின் உயர் அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடைபெறும். 2 நாட்கள் ஆலோசனை கூட்டங்களில், தமிழ்நாட்டில் தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் வைத்திருப்பது, அமைதியான, நேர்மையான முறையில் ஒரே நாளில் தேர்தலை நடத்தி முடிப்பது, அதற்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது உள்ளிட்டவை உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலதிக செய்திகள்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளர் ஆர். ஆர் (இராகவன்) காலமானார்!

இலங்கையிலுள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளும் இம்முறை கச்சதீவு திருவிழாவில் பங்கேற்கக்கூடாது! – இராமேஸ்வரம் விசைப் படகுச் சங்கத் தலைவர் கோரிக்கை

சாலை விபத்தில் பலியான எம்.எல்.ஏ லாஷ்ய நந்திகா.. தெலுங்கானாவில் அதிர்ச்சி

த.வெ.க. முதல் மாநாட்டை மதுரையில் நடத்த விஜய் திட்டம்!

போராடினால் பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை – விவசாயிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த அரசு!

மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் பொறியியலாளர் ஒருவர் கைது.

IMF சீர்திருத்தங்கள் சரியாக செய்யப்படாவிட்டால் பொருளாதாரத்தில் மோசமான விளைவுகள்.

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் நீதி நடவடிக்கைகளில் 729 குற்றவாளிகள் கைது.

Leave A Reply

Your email address will not be published.