வாகன விபத்துக்களில் ஐவர் பரிதாப மரணம்!

இலங்கையின் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 5 பேர் உயிரிழந்தனர்.

மொரந்துடுவ, கிரிந்த, புத்தளம், மாதம்பே மற்றும் அதுருகிரிய ஆகிய பகுதிகளில் இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று அறிவித்துள்ளது.

மொரந்துடுவ – களுத்துறை – பண்டாரகம வீதியில் தெல்கடை பகுதியில் பயணித்த மோட்டார் சைக்கிள், செலுத்துநரின் கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டு விலகி மரத்தில் மோதிய விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தார்.

பண்டாரகம பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்தார்.

இதேவேளை, திஸ்ஸமஹாராமய கிரிந்த வீதியில் விலமுல்ல சந்திக்கு அருகாமையில், கிளை வீதியில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள், பிரதான வீதியில் திடீரென பிரவேசித்து சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல், வீதிக்கு அருகில் இருந்த சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பலத்த காயங்களுக்குள்ளான சாரதி உயிரிழந்ததுடன் பின்னால் அமர்ந்து சென்றவர் காயமடைந்து அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார்.

உயிரிழந்தவர் திஸ்ஸமஹாராம பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.

இதேவேளை, புத்தளம் குருநாகல் வீதியில் கல்குளம் பிரதேசத்தில் குருநாகலிலிருந்து புத்தளம் திசை நோக்கிப் பயணித்த லொறி ஒன்று எதிர்த் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் லொறி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற பெண்ணும் மற்றும் பின்னால் பயணித்த பெண்ணும் சிறு குழந்தையும் காயமடைந்து புத்தளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் சாரதி உயிரிழந்தார்.

ஆனமடுவ பிரதேசத்தில் வசிக்கும் 47 வயதுடைய பெண்ணே இவ்வாறு மரணித்தார்.

லொறியின் சாரதியும் காயமடைந்து புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதேவேளை, பேலியகொடை புத்தளம் வீதியில் 63 ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் சிலாபத்திலிருந்து மாராவில் திசை நோக்கிச் சென்ற கார் வீதியைக் கடந்த பாதசாரி மீது மோதியது.

விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி, சிலாபம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டபோது உயிரிழந்தார்.

54 வயதான இவர், மாதம்பே, மல்லவாகர பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.

விபத்து தொடர்பில் காரின் சாரதி கைது செய்யப்பட்டார்.

அதேநேரம், அதுருகிரிய பனாகொட எம்புல்கம வீதியில் பனாகொடை சந்திக்கு அருகில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று செலுத்துநரால் கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது.

படுகாயமடைந்த சாரதி ஹோமாகம வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பனாகொடை – ஹோமாகம பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய நபரே இவ்வாறு மரணித்தார்.

Leave A Reply

Your email address will not be published.