மட்டு. இராமகிருஸ்ணமிசனில் வரலாறுகாணாத முப்பெருநாள் விழா!

ரதபவனி: கும்பாபிசேகம்:விபுலாநந்த சமாதி மண்டபத் திறப்பு.

உலகில் பரந்துபட்டு ஜீவசேவையாற்றிவரும் இராமகிருஸ்ணமிசனின் கிழக்குப்பிராந்திய மட்டு.மாநில இ.கி.மிசன் ஆஸ்ரமத்தில் எதிர்வரும் அக்.27ஆம் 28ஆம் 29ஆம் திகதிகளில் முப்பெருவிழாவை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.இலங்கைக்கான இராமகிருஸ்ணமிசனின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்த ஜீ மஹராஜ் சுவாமி ராஜேஸ்வரானந்த ஜீ மஹராஜ் ஆகியோர் பிரதானிகளாக கலந்துசிறப்பிக்கவுள்ளனர்.

அதுதொடர்பான முதலாவது உயர்மட்ட ஆலோசனைக்கூட்டம் கல்லடி ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷனின் மேலாளர் சுவாமி ஸ்ரீமத் சுவாமி தக்ஷஜானந்தர் மஹராஜ்  மற்றும் உதவி மேலாளர் ஸ்ரீமத் சுவாமி  நீலமாதவானந்தர் மஹராஜ் முன்னிலையில்
நேற்று(26) கல்லடி ஸ்ரீ ராமகிருஷ்ண மிசனில் நடைபெற்றது.

மட்டு.மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாநகர மேயர் தியகராஜா சரவணபவன் ஆலோசனை சபையின் உயர்பீட உறுப்பினர்கள் நலன் விரும்பிகள்  கலந்து கொண்டு பல ஆலோசனைகள் வழங்கப்பட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவில் நிருமாணிக்கப்பட்டுவரும் திருக்கோவிலின் கட்டுமானப்பணிகளை ஆலோசனைசபையினர் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.

கூட்டத்தில் மூன்றுநாள் நிகழ்வுகள் தொடர்பாக சுவாமிகள் விரிவாக விளக்கமளித்தனர்.

கல்லடி இ.கி.மிசன் ஆஸ்ரம்மத்தில் ஒன்றரை கோடீ ருபா செலவில் நிருமாணிக்கப்பட்டுவரும் பகவான் ஸ்ரீ ராமகிருஸ்ணர் திருக்கோவிலின்  மகாகும்பாபிசேகப்பெருவிழா எதிர்வரும் ஒக்டோபர் 28ஆம் திகதி புதன்கிழமை   நடைபெறவுள்ளது.

முதல்நாள் 27ஆம் திகதி பண்பாட்டுரதபவனி!

அதற்கு முதல்நாள் 27ம் திகதி செவ்வாயக்கிழமை ரதங்களின் ஊர்வல பவனி  சிறப்பாக  இடம்பெவககிறது. காரைதீவு மிசன பக்தர்களின் ஏற்பாட்டில் பல சிறப்பு ரதங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அத்துடன் மயிலாட்டம் ஒயிலாட்டம் கோலாட்டம் என தமிழ்மக்களின் பாரம்பரிய மரபுரீதியான பல கலைபண்பாட்டமிசங்கள் நிறைந்த பல கலைநிகழ்வுகள் பவனிவரவுள்ளன.

இப்பண்பாட்டு ரதபவனி மட்டக்களப்பு நகரின் காந்தி பூங்காவில் இருந்து மாலை 4.00மணிக்கு ஆரம்பித்து கல்லடி ஸ்ரீ ராமகிருஷ்ண மிசனை வந்தடையவுள்ளது.

இவ்ஊர்வலத்தில் பங்குகொள்வதற்கென திருகோணமலைஇ அம்பாறைஇ யாழ்ப்பாணம் இரத்தினபுரி மண்டுர் காரைதீவு அக்கரைப்பற்று கொழும்பு போன்ற பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். அவர்களுக்கான தங்குமிடவசதிகள் உணவு வசதிகள் வானத்தரிப்பு உள்ளிட்ட விஷேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்லடி ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷனின் மேலாளர் சுவாமி ஸ்ரீமத் தக்ஷஜானந்த மஹராஜ்  தெரிவித்தார்.

இரண்டாம்நாள் 28ஆம் திகதி கும்பாபிசேகப் பெருவிழா!

மறுநாள் 28ஆம் திகதி பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் திருக்கோயில் திறந்துவைப்பதுடன் பஐனைகள் கும்பாபிஷேகம் ஹோமம் பூஜை பாராயணம் புஷ்பாஞ்சலி ஆரதி பிரசாதம் வழங்கள் அன்னதானம் வீணை இசை விளக்குப் பூஜை சொற்பொழிவுகள் என பல நிகழ்வுகளும்  ஏற்பாடுசெய்யப்பட்டிருப்பதாக துணை மேலாளர் சுவாமி நீலமாதவானந்த மஹராஜ் கூறினார்.

காலையில் கண்ணகிஅம்மன் பேச்சிஅம்மன் ஆ சியுடன் கிரியைகள் ஆரம்பமாகி 6மணியளவில் ஆலயம் திறந்துவைக்கப்படும். தொடர்ந்து மங்களாரதி விம்பசுத்திப்பூஜை பலஆலயங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தங்கள் கொண்டு கிரியைகள் நடைபெறும். 6.30மணி தொடக்கம் 11மணிவரை விசேட பூஜைகள் தொடர்ச்சியாக மண்டபத்தினுள் நடைபெறும்.
இடையில் 10.30மணியளவில் வெளிப்புறத்தேயுள்ள தூபி கும்பபூஜை இடம்பெற்று கும்பாபிசேகம் இடம்பெறும். அபிசேகத்தைத்தொடர்ந்து ஹோமம் என்பன இடம்பெறும்.
பிற்பகலில் 3மணிக்கு வீணைஇசை 4மணிக்கு திருவிளக்குப்பூஜை 5மணிக்கு சுவாமிகளின் சொற்பொழிவுகள் இடம்பெறவுள்ளன. 6மணிக்கு கும்பாபிசே சிறப்பு மலர் வெளியீடு பஜனை இறுவெட்டு சிறப்பு நூல்பிரதிகள் விசேட வெளியீடுகள் படங்கள் அனைத்தும் வெளியிட்டுவைக்கப்படவுள்ளன. இரவு 7- 8மணிக்கு பஜனை ஆரதியுடன் கும்பாபிசேகப்பெருவிழா நிறைவடையும் எனவும் அவர் சொன்னார்.

மூன்றாம் நாள் சுவாமி விபுலாநந்த சமாதி மண்டபத்திறப்புவிழா!

மூன்றாம்நாளான அக்.29ஆம் திகதி வியாழக்கிழமை கல்லடி இ.கிமிசன் மணிமண்டப வளாகத்தில் நவீனவடிவில் புனர்நிருமாணம் செய்யப்பட்டுவரும் முத்தமிழ்வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரது சமாதி மண்டபத்திறப்;பு விழாவும் கூட்டமும் நடைபெறவிருக்கிறது.
சுவாமிகள் முன்னிலையில் இம்மண்டபத்தை இந்துகலாசார அலுவல்கள் திணைக்களப்பணிப்பாளர் அருளாநந்தம் உமாமகேஸ்வரன் திறந்துவைக்க ஏற்பாடாகியுள்ளது.
அன்று காலை 9.30மணி முதல் 12.45மணிவரை மாலை 3.30மணிமுதல் 5.30மணிவரையான காலப்பகுதியில் திறப்புவிழா நிகழ்வுகள் கூட்டங்கள் நடைபெறும்.என்று சுவாமிகளால் தெரிவிக்கப்பட்டன.

இதற்கான ஏற்பாடுகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பான ஆலோசனைகள் பெறப்பட்டு அந்நஇடத்திலேயே அமுலாக்கலுக்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன.

மட்டக்களப்பு கல்லடி ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷனில் இயங்கி வந்த பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் திருக்கோயிலில் 150பேர் மாத்திரம் தியானம் செய்யக்கூடியதாக கடந்த 50 வருடங்களாக இருந்து வந்தது.

அதில் விசேடகாலங்களில் பக்தர்கள் அதிகமாக கூடுகின்றபோது இடப்பற்றாக்குறை காணப்பட்டுவந்தது. அது பெரும் குறையாக காணப்பட்டது. இக்குறையினை தீர்க்கும் வகையில் 500 பக்தர்களை உள்ளடக்கும் வகையிலான தியான மண்டபத்துடன் பகவான் ஸ்ரீ ராமகிஷ்ணர் திருக்கோயில் அமைக்கப்பட்டு வருகின்றது. இக் கோவிலானது 15 மில்லியன் செலவில் அமைக்கப்பட்டு வருகின்றது. இக்கோயிலானது தனியாக ஆஸ்ரமத்தில் உள்ள மாணவர்கள் மாத்திரம் அல்லாது பொதுமக்களின் வருகையையும் அதிகரித்து மக்களையும் ஆஸ்ரமத்துடன் இணைக்கும் செயல்திட்டமாகவே அமைகின்றது.

இதேவேளை ராமகிருஸ்ணமிசனின் மட்டு.மாநில கல்லடி ஆஸ்ரமத்தில்  புதிதாக கட்டப்பட்ட சமையல் கூடம் மற்றும் ‘சிவானந்த பவன்’ என்னும் ஓஎல் ஏஎல் மாணவர்கள் தங்கும் விடுதியும் கடந்த   18ம் திகதி வெள்ளிக்கிழமை  ஆரம்பித்து வைக்கப்பட்டன.

அதிதிகளாக கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் சுவாமி    ஸ்ரீமத் சுவாமி ராஜேஷ்வரானந்த மஹராஜ்  மட்டக்களப்பு அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்..

மாணவர்கள் இல்ல கட்டிடமாகிய சிவானந்த பவனில் ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கு ஹோமமும் பூஜையும் ஆராதனையும் நடாத்தினார்  மட்டு.ஆஸ்ரம துணைமேலாளர் ஸ்ரீமத்  சுவாமி நீலமாதவானந்தர். அந்நிகழ்வுகளைத் தொடர்ந்து எதிர்வரும் 27 28 29ஆம் திகதிகளில் முப்பெருவிழாக்கள் நடைபெறவிருக்கின்றன.
1969இல் சுவாமி வீரேஸ்வரானந்த மஹராஜ் அடிக்கல்நட்டு 1972இல் கல்லடி புதிய ஆஸ்ரமக்கட்டடத்தை சுவாமி பிரேமாத்மானந்த ஜீ திறந்துவைத்த பெருவைபவத்தையடுத்து இம்முறை பிரமாண்டமாக கோலாகலமாக முப்பெருவிழா நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Leave A Reply

Your email address will not be published.