சூட்சுமமான முறையில் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்ட சேனை அழிப்பு.

நுவரெலியா மாவட்டத்திலுள்ள நானுஓயா எடின்புரோ தோட்டத்திற்கு மேற்பகுதியில் உள்ள அரசாங்க வனப்பகுதியில் மிகவும் சூட்சுமமான முறையில் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்ட சேனையொன்றை நுவரெலியா பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நேற்று (07) மாலை சுற்றி வளைத்துள்ளனர்.

குறித்த கஞ்சா சேனையில் 3 மற்றும் 5 அடி உயரமான 272 கஞ்சா செடிகள் இருந்ததாகவும், சுற்றிவளைப்பின் போது கஞ்சா செய்கையில் ஈடுபட்ட நபர் தப்பியோடிவிட்டார் எனவும் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நுவரெலியா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்காக 3 செடிகளை மட்டும் வைத்துக்கொண்டு ஏனைய கஞ்சா செடிகளை தீயிட்டு அழிப்பதற்கு விசேட அதிரடிப்படையினர் நடவடிக்கை எடுத்தனர்.

அத்துடன், இதன் பின்னணியில் உள்ளவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையையும் விசேட அதிரடிப்படையினர் ஆரம்பித்துள்ளனர்.

இதற்கு முன்னரும் நுவரெலியாவில் கஞ்சாவுடன் நபர்கள் கைதாகியிருந்தாலும், வனப்பகுதியில் பாரியளவில் கஞ்சா செய்கை செய்யப்பட்ட தோட்டமொன்று சுற்றிவளைக்கப்பட்டமை இதுவே முதல் சந்தர்ப்பமாக கருதப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.