அயோத்தி, வாரணாசி, லக்னோவில் பாஜக படுதோல்வி: சமாஜ்வாதி கட்சிக்கு வெற்றி

உத்தரப்பிரதேச பஞ்சாயத்து தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. அயோத்தி, வாரணாசி, லக்னோ நகரங்களில் பெரும்பான்மை இடங்களை சமாஜ்வாதி கட்சி கைப்பற்றி உள்ளது.

கொரோனா 2-வது அலை கோரத்தாண்டவமாடி வரும் நிலையிலும் உத்தரப்பிரதேசத்தில் பஞ்சாயத்து தேர்தல்களை நடத்தியது பாஜக அரசு. இந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மோடியின் கட்சி வாரணாசியில் பரிதாப தோல்வி

பிரதமர் மோடியின் வாரணாசி லோக்சபா தொகுதியில் மிக மோசமான தோல்வியை தழுவி உள்ளது பாஜக. 40 மாவட்ட பஞ்சாயத்துகளில் வெறும் 8 இடங்களில்தான் பாஜக வென்றுள்ளது. சமாஜ்வாதி கட்சி 14 இடங்களைக் கைப்பற்றியது. பகுஜன் சமாஜ் 5, அப்னா தள் 5, ஆம் ஆத்மி 1, எஸ்பிஎஸ்பி கட்சி 1 இடத்தில் வென்றுள்ளன. 3 சுயேட்சைகளும் வென்றுள்ளனர். அதேபோல் லக்னோவிலும் பாஜக படுதோல்வியை சந்தித்துள்ளது.

லக்னோவில் மொத்தம் உள்ள 25 இடங்களில் பாஜகவுக்கு கிடைத்தது வெறும் 3 இடங்கள்தான். 18-வது வார்டில் போட்டியிட்ட 2 முறை எம்பியாக இருந்த பாஜகவின் ரீனா சவுத்ரி படுதோல்வியை சந்தித்தார். ரீனா சவுத்ரியை சமாஜ்வாதி கட்சியின் ஆதரவு பெற்ற பாலக் ராவத், 2000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

பாஜகவை கை கழுவிய அயோத்தி
பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்படும் அயோத்தி நகரமும் பாஜகவை கை கழுவியிருக்கிறது. அயோத்தியில் மொத்தம் உள்ள 40 இடங்களில் பாஜகவுக்கு வெறும் 6 இடங்கள்தான் கிடைத்திருக்கிறது. சமாஜ்வாதி கட்சி 24 இடங்களைக் கைப்பற்றியது. பகுஜன் சமாஜ் கட்சி 5 இடங்களில் வென்றிருக்கிறது.

கோரக்பூரில் கடும் போட்டி
முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கோரக்பூர் வாக்கு எண்ணிக்கை இறுதி முடிவுகள் முழுமையாக அறிவிக்கப்படவில்லை. அங்கு மொத்தம் 68 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. பாஜக, சமாஜ்வாதி கட்சிகளிடையே கடும் போட்டியும் நிலவியது. இதுவரை பாஜக 20, சமாஜ்வாதி 19 இடங்களில் வென்றுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.