‘ஷெர்னி’ ஹிந்தி திரைப்படம்

‘ஷெர்னி’ ஹிந்தி திரைப்படம் நம்மை புலி சுவடுகளின் ஊடாக  காடுகளுக்குள் ஆழமாக அழைத்துச் செல்லும் , விறுவிறுப்பான, திரைப்படம். மனிதனுக்கும் மிருகங்களுக்குமுள்ள போர் மனிதனுக்கும் இயற்கைக்கும் நிகழும் போர் அதன் காரண காரணங்களுடன் துளியும் விரசமில்லாது மக்களை சென்றடையக்கூடிய திரைப்படம் இது.

அடர்த்தியான, பசுமையான காடுகள் ,  ஒளிரும் சூரிய ஒளியும் இருளும் விரவிக்கிடக்கும் காடுகளின் அழகு, புலியின் கர்ஜனையுடன் பறவைகள் மற்றும் விலங்குகளின் தனித்துவமான ஒலிகள், சுத்தமான நீரோடைகள், பூச்சிகளின் , இலைகளின் சலசலப்பு, – இவை அனைத்துக்கும் மத்தியில் அங்கு வாழும் காட்டின் மக்களும் வன பாதுகாவர்களின் வாழ்க்கையும் அடங்கிய மிகச்சிறந்த திரைப்படம்  ‘ஷெர்னி’.

இது மனித கதாபாத்திரங்களை மட்டுமல்ல,  அரசு திணைக்களத்தின் செயல்பாடுகள் குறித்தும், கிராமம் காடுகள் அதிலுள்ள வனவிலங்குகளின்  இருப்பின்  சிக்கலகளை குறித்தும் நுண்ணறிவை அளிக்கிறது இத்திரைப்படம்.

வழக்கமான பாலிவுட் திரைப்படங்களின்  ஆரவாரங்கள் இல்லாது ஆனால் விரசமல்லாத முறையில் அனைவருக்கும் காடுகளை பற்றி கற்றுக்கொடுக்கும்,  அதன் இயற்கை அழகியலுடன் சுவாரசியமான பல திருப்பங்கள் கொண்ட விறுவிறுப்பான திரைப்படம் என்றால் மிகையாகாது.

இத்திரைப்படத்தை  அமித் மசூர்கர் இயக்கியுள்ளார். வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் சமநிலையைப் பராமரிப்பதின் தேவையை பற்றிய மசூர்கரின் ஒரு ஆக்கபூர்வமான திரைப்படமாகும் இது.  அவ்வகையில்  ‘ஷெர்னி’ ஒரு தீவிரமான, புதிரான திரைப்படத்தை உருவாக்குகிறது.   இத்திரைப்படம்  கட்டாயமாக அனைவரும்  பார்க்க வேண்டியது.

அரசு, வனத்துறை அதிகாரிகள்,உள்ளூர் மக்கள், உள்ளூர் அரசியல், பழங்குடி மக்கள் வாழ்க்கை, அரசு அதிகாரிகளின் குடும்ப வாழ்க்கை என  சிக்கலான கதைகளை ஒரு வளமான காட்சி அமைப்புடன் சரியாக கோர்த்து தந்துள்ளார் இயக்குனர்.   ஆஸ்தா டிக்குவின் திரைக்கதை மிக நுணுக்கமானதும்  விரிவானதுமாகும்.  , ஹுசைன் ஹைட்ரியின் இசை படத்தின் கதைக்கு பொருந்தி போகிறது.

கேமரா ராகேஷ் ஹரிதாஸ்,  ஒளிப்பதிவு மற்றும் ஒலி வடிவமைப்பு அனிஷ் ஜான். இத்திரைப்படத்தை காண்பவர்களால்  காடுகளை காதலிக்காமல் விலகி நடக்க முடியாது.  காடுகளின் அழகு எளிதில் மயக்கி விடுகிறது. ஒரு காட்சியில்  வித்யாவின் உதவியாளர்களில் ஒருவர்  கூறுகிறார் “ நீங்கள் 100 முறை காட்டுக்குச் சென்று ஒரு முறை ஒரு புலியைக் கண்டிருக்கலாம் , ஆனால் புலி உங்களை 99 முறையும் கண்டு அவதானித்து இருக்கும்  என்பது  உறுதியாகும் என்கிறார்.  காடுகளில் யார் உயர்ந்தவர், காடுகள் யாருடையது,  காடுகளை பாதுகாக்க வேண்டியதின் தேவை என்ன என்பதை பழங்குடி மக்கள் தெரிந்தே வைத்து இருக்கின்றனர்.

 

ஒன்பது ஆண்டுகளாக பதவி உயர்வு பெறாத வன அதிகாரியான வித்யா வின்சென்ட்(வித்யா பாலன்)  மத்தியப் பிரதேசத்தின் காடுகளில் பிரதேச வன அலுவலராக (டி.எஃப்.ஓ )  பொறுப்பேற்கிறார்.  மனிதனுக்கும் இயற்கைக்கும், மனிதனுக்கும் காட்டு விலங்குகளுக்கும் இடையிலான  மோதலை   சமநிலைப்படுத்தி உறவை மீட்டெடுக்க முடியுமா? என்ற கருத்தாக்கத்துடன் கதை  துவங்குகிறது.

வேலையில் பிரவேசித்ததுமே தன்னை காத்து பல சவால்கள் உண்டு என தெரிந்து கொள்கிறார்.   தனது வேலையை எவ்வளவு காலத்திற்கு தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று அவருக்குத் தெரியவில்லை.  ஆண் ஆதிக்கம் செலுத்தும் துறையில் வித்யாவின் உலகம் தனிமைப்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது.  இருந்தாலும் மிகவும் சொற்பமான  சொற்களை உரையாடிக்கொண்டு  தனது வேலையில்  உறுதியாகவும் தீவிரமாகவும் செயலாற்ற ஆரம்பிக்கிறார்.  எத்தனை தடை வந்தாலும் அதை எதிர் கொண்டு முன்னேறுகிறார்.  தான் மிகவும் மதித்த தன்னுடைய மேலதிகாரியின் பொறுப்பின்மையை கண்டு  “உங்களை பார்த்து பரிதாபம் கொள்கிறேன் , நீங்கள்  ஒரு கோழை” எனக்கூறவும் தயங்கவில்லை.

வனத்துறையால் டி 12 என அடையாளம் காணப்பட்ட ஒரு புலியால்  கிராம ​​மக்களும் பண்ணை விலங்குகளும் இரையாக ஆரம்பிக்கின்றன. காடுகளால் சூழப்பட்ட கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு காடுகளில் மேற்கொள்ளும்  வளர்ச்சி திட்டங்கள் மக்களின் வாழ்விற்கு அச்சுறுத்தலாக மாறுகிறது.   கல்லூரியில் விலங்கியல் பேராசிரியராக இருக்கும் ஹசன் நூரானி (விஜய் ராஸ்),  கிராமக் குழுவின் உறுப்பினரான ஜோதி (சம்பா மண்டல்) , வனத்துறை கடைநிலை ஊழியர்களின் உதவியுடன் புலியிடம் இருந்து கிராம மக்களை மீட்டாரா?  புலியை உயிரோடு மீட்டாரா என்பதே கதை .

வித்யாவைப் பொறுத்தவரை, டி 12 ஐ உயிருடன் கண்டுபிடிப்பது மற்றும் கைப்பற்றுவது மிக முக்கியமானது,  உள்ளூர்வாசிகளின் உணர்வுகள், அரசியல்வாதிகள் கட்டியெழுப்பும் அழுத்தம், மேலதிகாரியின்  அணுகுமுறை என  புலியை பிடிப்பது  பெரும் சவாலாக மாறுகிறது.

இதனிடை காடுகளின் பாதுகாவலன் என தன்னை  தானே அழைத்துக் கொள்ளும் ஒரு அரசியல்வாதியின் கூட்டாளியான மிருக வேட்டைக்காரனான ரஞ்சனின் அத்துமீறல்கள்.  தான் வேட்டையாடிய புலிகளின் எண்ணிக்கையில் தன்னை பெருமைப்படுத்துக் கொள்ளும் அவனுடைய மனநிலை வித்தியாவை எரிச்சல் கொள்ளச்செய்கிறது.  புலியை சுட்டு கொன்று விட்டு எத்தனை அழகாக உள்ளது என்று கூறும் அவனின் வன்மம் பார்வையாளர்களை சோகத்தில் ஆழ்த்தி விடுகிறது.  தாய் புலியை கொன்று விட்டாலும் அதன் இரு குட்டிகளை காப்பாற்றுவதுடன் கதை முடிகிறது.

வித்யா பாலன் ஒரு வித்தியாசமான , கச்சிதமான  மற்றும் சக்திவாய்ந்த நடிப்பை தருகிறார், ஒவ்வொரு காட்சியிலும் தனது கதாபாத்திரத்தின் அமைதியான உறுதியையும், ஆர்வத்தையும், மனநிலையையும் வெளிப்படுத்துகிறார். எந்தவொரு வியத்தகு செயலாக்கவும்  இல்லாமல், கோபத்தை பேசும் கண்களால் வெளிப்படுத்தி  சிறப்பாக நடித்துள்ளார்.  குறிப்பிட்ட  மிக சொற்ப காட்சிகளில் வந்தாலும்   நங்கியா (நீரஜ் கபி) தனது எதிர்மறை பாத்திரத்தை மிகவும் சிறப்பாகவே செய்திருந்தார்.

இத்திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைத்தால் சிறப்பான முன்னுதாரணமாக அமையும்.

Leave A Reply

Your email address will not be published.