மக்கள் எழுச்சியால் அரசை மாற்ற முடியும்! சுமந்திரன் எம்.பி. எச்சரிக்கை.

“மக்களுடைய எழுச்சியால் அரசின் கொள்கையையும் மாற்ற முடியும். தேவைப்பட்டால் இந்த அரசையும் மாற்ற முடியும்.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

வன ஜீவராசிகள் திணைக்களத்தால் வடமராட்சி கிழக்கில் 196 சதுர கிலோமீற்றரை தேசிய பூங்கா எனும் பெயரில் ஆக்கிரமித்துள்ள கேவில் – முள்ளியான் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு அவர்களது பிரச்சினைகள் தொடர்பில் நேரடியாகப் பார்த்தும் கேட்டும் அறிந்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கேவில் பிரசே பிரதேசத்திலே காலாகாலமாக மக்கள் பயிர் செய்து வந்த காணிகளை ஜீவராசி திணைக்களத்தினர் தமது நிலங்கள் என்று சொல்லி அந்த மக்களுடைய தொழிலைப் பாதிக்கின்ற வகையில் அந்தப் பிரதேசத்துக்குள்ளே உள்நுழையக் கூடாது என்று தடை விதித்திருக்கிறார்கள்.

சில நெல் வயல்கள் ஏற்கனவே விதைக்கப்பட்டிருக்கின்ற நிலையில் அதற்குள்ளேயேயும் எவரும் போகக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது.

விதைத்த காணியில் வேலியடைத்தவரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றார்கள்.

இது சம்பந்தமாகவும் ஒரு சில விடயங்கள் சம்பந்தமாகவும் யாழ். மாவட்ட அரச அதிபருடனும் பேச்சு நடத்தியிருந்தோம்.

அரச அதிபர் இது சம்பந்தமாக ஏற்கனவே சில நடவடிக்கைகளைத் தாம் எடுத்திருப்பதாக அறிவித்திருந்தார்.

வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு இந்தப் பிரதேச விவசாயிகள் பல காலமாக இங்கே இந்த நிலங்களை விதைத்து இருக்கின்றார்கள் என்ற விடயத்தை அரச அதிபர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

அதற்குப் பதில் எதுவும் இல்லை. 1976ஆம் ஆண்டிலிருந்து அவர்கள் கிரமமாக இந்தப் பிரதேசத்திலேயே பயிர் செய்து வந்திருக்கின்றார்கள்.

அதற்கான உரித்து அவர்களுக்கு இருக்கின்றது. ஆகவே, திடீரென்று வனஜீவராசிகள் திணைக்களம் வந்து இந்தப் பிரதேசத்தில் மக்களுடைய வாழ்வாதாரத்தைப் பாதிக்கின்ற வகையில் செயற்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது.

ஒரு விடயம் இங்கே சுத்திப் பார்த்தாலே தெரியும். சுற்றுச்சூழலுக்கு எந்தவிதமான பாதிப்பும் கிடையாது. வனமாக இருக்கின்ற இடம் வனமாகவே இருக்கின்றது. ஆகவே, இந்தப் பிரதேச மக்களே இந்தச் சுற்றுச்சூழலை மிகவும் பொறுப்பாகப் பாதுகாத்து வந்திருக்கின்றார்கள்.

இங்கே வருகின்ற பறவைகள் இப்போதும் இங்கே வந்து போய்க் கொண்டுதான் இருக்கின்றன. ஆகவே, திடீரென்று நாங்கள்தான் இவற்றையெல்லாம் பாதுகாக்கின்றவர்கள் என்று வனஜீவராசிகள் திணைக்களத்தினர் வந்து இந்த மக்களுடைய வயிற்றிலே அடிப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது.

இது சம்பந்தமாக யாழ். மாவட்ட அரச அதிபருடன் பேசியது போல் மற்றைய உயர் அதிகாரிகளோடும் நாங்கள் பேசுவோம். அப்படி அவர்கள் அதற்கும் இணங்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும்.

அதற்கு முன்பதாக ஏற்கனவே விதைத்த வயல்களிலேயாவது தொடர்ந்து அந்தப் பயிர்ச்செய்கையைச் செய்வதிலே அவர்கள் எந்தவிதமான தடையும் விதிக்கக்கூடாது.

நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டுக் கொண்டிருப்பது ஒரு பக்கத்திலே நடந்துகொண்டிருக்க, சாதாரணமாக இயற்கையாகவே பயிர் செய்து வந்த பிரதேசங்களிலும் பயிர் செய்யவிடாமல் தடுப்பது என்பது மிகவும் மோசமான ஒரு செயற்பாடு.

ஆகையினாலே இந்தப் பிரதேசத்திலே காலங்காலமாக பயிர் செய்து வந்தவர்கள் தங்கள் தொழிலைத் தொடர்ந்து செய்வதற்கு அரசு அனுமதிக்க வேண்டும்.

இந்தப் பகுதிக்குள்ளே ஒரு மதுபான விற்பனை நிலையமும் விருந்தினர் விடுதியும் இருக்கின்றதே? மக்களுக்கு மட்டும்தான் தடையா?” என்றும் கேள்வி எழுப்பினார்.

Leave A Reply

Your email address will not be published.