பாரத் பந்த் – குறைந்த அளவே அரசு பேருந்துகள் இயக்கம்.. மக்கள் அவதி

தொழிற்சங்களின் நாடு தழுவிய போராட்டம் காரணமாக தமிழகத்தில் குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தொழிற்சங்களின் நாடு தழுவிய போராட்டம் காரணமாக பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். வாரத்தின் முதல் நாளான இன்று பொதுமக்கள் பரபரப்பாக இயங்க தொடங்கிய நிலையில் போராட்டம் காரணமாக பேருந்துகள் ஓடாததால் வேலைக்கு செல்வோர் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சென்னையில் காலை நிலவரப்படி 10 சதவிகித பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதால் ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் பயணிகள் பேருந்துக்காக காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. சென்னையில் 3,500 பேருந்துகள் இயங்கும் நிலையில் தற்போது 700 மட்டுமே இயங்குகிறது.

சென்னை மட்டுமல்ல தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் இதேநிலைதான் உள்ளது. செங்கல்பட்டு அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து 85 பேருந்துகளில் 15 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது.. கல்பாக்கம் பணிமனையில் 36 பேருந்துகளில் 15 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது மதுராந்தகம் 49 பேருந்துகள் உள்ள நிலையில் தற்போது 8 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு போக்குவரத்து பணிமனையில் உள்ள 65 பேருந்துக்களில் தற்போது வரை 25 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் தனியார் பேருந்துகளும் , மினி பஸ்களும் வழக்கம் போல் இயங்குகின்றன. விளாத்திகுளம் அரசு போக்குவரத்து பணிமனையில் உள்ள 36 பேருந்துகளில் 27 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

மயிலாடுதுறை அரசு பேருந்து பணிமனையில் இருந்து 15 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. கோவையில் 40 சதவீத பேருந்துகள் இயக்கபட்டு வருகின்றது. கோவையில் இருந்து கேரளாவிற்கு தமிழக பேருந்துகள் இயக்கப்பட வில்லை. கேரள மாநில பேருத்துகளும் தமிழகத்துக்கு இயக்கப்படவில்லை. பெரும்பாலான ஆட்டோக்களும் இயக்கப்படவில்லை. ஒரு சில மாவட்டங்களில் நகரங்களில் தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள் இயக்குகின்றன. இந்த போராட்டத்தின் காரணமாக கிராமப்புறங்களில் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

நாட்டின் முக்கிய தொழிற்சங்கங்களாக இருக்கும் INTUC, AITUC, HMS, CITU, AIUTUC, TUCC, SEWA, AICCTU, LPF மற்றும் UTUC ஆகியவை கடந்த 22-ம்தேதி டெல்லியில் முக்கிய ஆலோசனை நடத்தின. இதில் வரும் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் அதாவது திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படுவது என்ற முடிவு எடுக்கப்பட்டது. தொழிலாளர்களுக்கான இ.பி.எஃப். தொகைக்கான வட்டி 8.5 சதவீதத்தில் இருந்து 8.1 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதற்கு தொழிற்சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர், சி.என்.ஜி. ஆகியவற்றின் விலை உயர்வுக்கும் தொழிற் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.தனியார் மயமாக்குதலை மத்திய அரசு நிறுத்த வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு வழங்கப்படும் ஊதியத்தை உயர்த்த வேண்டும், இந்த திட்டத்தை நகரங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகைளை வலியுறுத்தியும் போராட்டம் நடத்தப்படவுள்ளது.28, 29 தேதிகளில் ‘மக்களைக் காப்போம், நாட்டைக் காப்போம்’ என்ற முழக்கத்துடன் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று தொழிற் சங்கங்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.