இலங்கையின் விவகாரத்தில் மீண்டும் நுழையும் ஜப்பான்!

கடன் நெருக்கடியில் இருந்து இலங்கையை விடுவிக்கும் நோக்கில், கடன் வழங்கிய தரப்பினருடன் கலந்துரையாடலை ஏற்பாடு செய்வதற்கு ஜப்பான் அரசு திட்டமிட்டுள்ளது என ரொய்ட்டஸ் செய்திச்சேவை நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை மையப்படுத்தி கடன் வழங்குநர்களின் மாநாட்டை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜப்பானை கேட்டிருந்தார். இதற்கமையவே ஜப்பான் குறித்த மாநாட்டை கூட்ட விருப்பம் கொண்டிருக்கலாம் என்று கருதப்படுகின்றது.

இலங்கைக்கு கடன் வழங்கிய மிகப் பெரிய நாடான சீனா இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமா என்பது தொடர்பில் தகவல் எதுவும் வெளியாகவில்லை.

முன்னதாக சீனாவுடனான கடன் மறுசீரமைப்புக்கு அந்த நாடு தனது நிலைப்பாட்டை மாற்றவேண்டும் என ஜனாதிபதி ரணில் கோரியிருந்தார். இவ்வாறானதொரு சூழலில், ஜப்பானுக்குப் பயணம் மேற்கொள்ளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்த மாநாட்டில் கலந்து கொள்வார் என்று தெரிகின்றது.

இலங்கை அரசுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான பேச்சுக்களின்போது ஜப்பான் அரசு, இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் மாநாட்டை ஒழுங்கமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.