நடுத்தெருவில் இலங்கை; எந்த நாடும் உதவத் தயாரில்லை! – சஜித் அணி தெரிவிப்பு.

“சர்வதேச சமூகம் இலங்கையைக் கைவிட்டுவிட்டது. எந்த நாடும் எமது நாட்டுக்கு ஒத்துழைப்பை வழங்கும் நிலைப்பாட்டில் இல்லை.”

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்த்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“எமது நாடு பாரிய பொருளாதார நெருக்கடியில் உள்ளது. அது மாத்திரமல்லாது ஏனைய வலய நாடுகளின் மத்தியில் எமது நாடு மந்த போசனை மட்டத்தை எட்டியுள்ளது. இதற்குப் பிரதான காரணம் பொருளாதார நெருக்கடியாகும்.

பொருளாதாரம் பாரிய அளவில் வீழ்ச்சி கண்ட நாடாக எமது நாடு ஆக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதற்குத் தீர்வு குறித்து வினவும்போது சர்வதேச நாணய நிதியத்தை மாத்திரமே எம்முடைய நாடு எதிர்பார்த்துள்ளது.

மாறாக நாட்டினுள் பொருளாதாரத்தை மேம்படுத்த எந்தவிதமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.

சர்வதேச நாணய நிதியம் எப்போது அந்தப் பணத்தைத் தந்துதவும் என்ற கால எல்லையும் இல்லை.

இந்தநிலையில் நாட்டில் மனித உரிமை மீறல்களும் இடம்பெற்று வருகின்றன.

ஆனால், அதனைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

நாம் ஜெனிவா அமர்வில் கலந்துகொண்டோம். அதன்போது மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் எமது நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி ஆக்கப்பட்டுள்ளது எனத் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

நாம் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பைக் கேட்டாலும் கூட சர்வதேசத்தின் உதவி எமது நாட்டுக்குக் கிடைப்பதற்கு ஏற்ற சூழல் எம்முடைய நாட்டில் உள்ளதாகத் தெரியவில்லை” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.