சாலையில் படுத்து நடிகர் பவன் கல்யாண் திடீர் போராட்டம்… ஆந்திராவில் பரபரப்பு!

ஊழல் வழக்கில் ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்ட நிலையில், அவரை சந்திக்க சென்ற போது காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் நடிகர் பவன் கல்யாண் சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவுக்கும் வார்த்தை போர் முற்றிய நிலையில், கைது நடவடிக்கையை கையில் எடுத்துள்ளார் ஜெகன் மோகன். சந்திரபாபு நாயுடுவின் கைது ஆந்திர அரசியல் களத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று காலை ஊழல் குற்றச்சாட்டில் சந்திரபாபு நாயுடுவை ஆந்திர மாநில சிஐடி போலீசார் கைது செய்தனர். அங்கிருந்து சுமார் 9 மணி நேரம் சாலை மார்க்கமாக சந்திரபாபு நாயுடு விஜயவாடாவில் உள்ள ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விஷயங்களை விசாரிக்கும் சிறப்பு விசாரணை அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

தொடர்ந்து அலுவலகத்தில் உள்ள ஆறாவது தளத்தில் சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் சந்திரபாபு நாயுடுவிடம் விடிய விடிய விசாரணை மேற்கொண்டதாக தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணிக்கு அவரை விஜயவாடாவில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சிஐடி அதிகாரிகள் அழைத்து சென்றனர்.

அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில் நேற்று இரவு 12 மணிக்கு ஹைதராபாத்தில் இருந்து ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் விஜயவாடாவை நோக்கி வந்தார்.பவன் கல்யாண் வருகைப் பற்றி தகவல் அறிந்த பல்லாயிரக்கணக்கான ஜனசேனா கட்சி தொண்டர்கள் அவரை வரவேற்க குவிந்தனர். இதனால் சந்திரபாபு நாயுடு கைது காரணமாக ஏற்கனவே பரபரப்பாக இருக்கும் விஜயவாடா மேலும் பரபரப்படைந்தது.

இந்த நிலையில் பவன் கல்யாணை சந்தித்த போலீசார் அவரை விஜயவாடாவுக்குள் வர வேண்டாம் என்று கேட்டு கொண்டனர். இதனால் பவன் கல்யாண் தன்னுடைய காரின் மேல் அமர்ந்த நிலையிலும்,சாலையில்படுத்தும் சுமார் 2 மணி நேரம் தூங்கினார் . மிக நீண்ட போராட்டத்திற்கு பின் பவண் கல்யாணை தங்களுடைய வாகனத்தில் ஏற்றிய போலீசார் அவரை வேறு பகுதிக்கு அழைத்து சென்றனர்.

Leave A Reply

Your email address will not be published.